காலையில் எழுந்தவுடன் சோர்வாக இருந்தால்

காலை விழித்த உடன் அந்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளும் வகையில் நம் உடலில் ஆற்றல் இருக்க வேண்டும். ஆனால், பலருக்கும் விடிந்தாலும் எழ முடிவதில்லை. எழுந்தாலும் மீண்டும் படுக்கையிலேயே படுத்துக் கொள்ளலாமா என்று தோன்றும். ஏன் காலைப்பொழுது பலருக்கு சோர்வாக இருக்கிறது? உணவுமுறையில் இதனை சரி செய்ய முடியுமா? – டயட்டீஷியன் சிவப்ரியாவிடம் கேட்டோம்…

ஒருவர் காலையில் உற்சாகமாக எழ, முதல் நாளின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பதை வைத்தே முடிவு செய்ய முடியும். சூரிய உதயத்தின்போது எழுவதும், சூரியன் மறைந்த பிறகு தூங்கும் முறையும் மனித வாழ்க்கையின் வழக்கம். தூக்கம் மற்றும் விழித்திருக்கும் சுழற்சி பகல் மற்றும் இரவுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது கவனத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயம். முதல் நாளில் நல்ல தூக்கம் அமைந்தாலே அடுத்த நாள் சோர்வின்றி அமையும். இதற்கு பல ரசாயனங்கள், அமினோ அமிலங்கள், என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன்கள் இணைந்து உதவி செய்கின்றன. இவை நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் தூக்க சுழற்சியை சீராக்கவும் உதவுகின்றன.

டிரிப்டோபான், மெலட்டோனின், செரோடோனின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட், பி வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் டி ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளும்போது நம்மால் முதல்நாள் இரவில் எளிதாகத் தூங்க முடிகிறது. அது அடுத்த நாள் காலைப்பொழுதில் புத்துணர்ச்சியுடன் எழ வைத்துவிடும். ஏனெனில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ நல்ல தூக்கமும் மிக முக்கியமாகும்.

சில நாட்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைத்து, உங்கள் மூளையையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்து இருக்கலாம் மற்றும்  நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நாம் உண்ணும் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், உடலையும் மூளையையும் நன்றாக தூங்குவதற்குத் தயார் செய்யலாம், அத்துடன் தூக்கமின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கலாம். அதற்கான சில உணவுகளைப் பார்ப்போம்…

  • மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் ஆகியவற்றின் தாதுப் பற்றாக்குறை தூக்கப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னைகள் எழாமல் பார்த்துக் கொள்ள இரவு தூங்குவதற்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல தூக்கத்தை மேம்படுத்தும்.
  • பாதாம்பருப்பில் அதிக அளவு மெலடோனின் உள்ளது. இந்த ஹார்மோன் தூக்கம் மற்றும் விழித்திருக்கும் சுழற்சியை சீராக்க உதவுகிறது. மேலும் பாதாம் பருப்பில் மெக்னீசியம் கால்சியம் உள்ளது, இது தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. பாதாம் ஒரு ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி. ஏனெனில் அவற்றில் நல்ல கொழுப்புகள் அதிகமாகவும் மற்றும் சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும் உள்ளன.
  • தூக்கமின்மைக்கு ஒரு பொதுவான வீட்டு வைத்தியம் சூடான பால். டிரிப்டோபான், கால்சியம், வைட்டமின் டி மற்றும் மெலடோனின் ஆகிய 4 தூக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்களும் பாலில் உள்ளன. படுக்கைக்கு முன் ஒரு சூடான கப் பால் சாப்பிடுவது நமது பழக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.
  • கொழுப்பு நிறைந்த மீன்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவக்கூடும். ஏனெனில் அவை வைட்டமின் டி மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும். செரோடோனின் சுரப்பதற்கு உதவும் இரண்டு ஊட்டச்சத்துக்கள் ஆகும். நிலையான தூக்கம் மற்றும் விழித்திருக்கும் சுழற்சியை நிறுவுவதற்கு செரோடோனின் பெரும்பாலும் உதவுகிறது.
  • வெள்ளை சாதம் பல நாடுகளில் பிரதான உணவாக பரவலாக உண்ணப்படுகிறது. அதிக மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து இல்லாதது அதன் உயர் கிளைசெமிக் குறியீட்டிற்கு பங்களிக்கிறது. படுக்கைக்கு சில மணி நேரத்திற்கு முன்பு வெள்ளை சாதம் போன்ற உயர் கிளைசெமிக் குறியீட்டுடன் கூடிய உணவுகளை சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். வெள்ளை அரிசி சாதத்தை தூங்கச் செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே உட்கொள்ள வேண்டும். தூக்கத்தை ஊக்குவிப்பதில் வெள்ளை சோறுக்கு அதிக பங்கு இருந்தாலும், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் இதனை மிதமாக உட்கொள்ள வேண்டும்.
  • முழு தானிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா மற்றும் சர்க்கரைக்கு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது, கொழுப்பு குறைந்த சீஸ்(Cheese) உணவுகளை உண்பது ஆகியவை தூக்கத்தினை மேம்படுத்தும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
  • காரமான அல்லது எண்ணெய் அதிகமான நெஞ்செரிச்சல் ஏற்படுத்தக்கூடிய உணவுகளைத் தவிர்ப்பது, படுக்கைக்குச் செல்லும் முன் caffeine கொண்ட உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்ப்பது, நீர்ச்சத்துப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, படுக்கைக்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். தூக்கத்தை ஊக்குவிக்கும் பெரும்பாலான உணவுகள் சத்தானவை மற்றும் தீங்கு விளைவிக்காதவை என்றாலும், அவற்றையும் மிதமான அளவிலேயே உண்ண வேண்டும்…

Sweet dreams!

தொகுப்பு: இதயா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *