கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சதித்திட்டம்?

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு திறைமறைவில் சதித்திட்டம் தீட்டப்படுகின்றதா? அதற்கு முஸ்லிம் சமூகத்தில் சிலரே உடைந்தையாக இருக்கின்றனரா? என்கின்ற சந்தேகம் நீடிக்கிறது. சரி இம்முறை கண்டி மாவட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த சில அனுமானங்களை பார்ப்போம்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 7 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்களும் பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனது கணிப்பின் அடிப்படையில் சிலவேளை பொதுஜனபெரமுன 8 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையுமே பெற வாய்ப்பு இருக்கிறது.
பொதுஜன பெரமுனவில் ஒருவர் பிரதிநிதியாவதற்கு கிட்டத்தட்ட 80 ஆயிரம் வரையிலான வாக்குகளை பெற வேண்டி ஏற்படும். ஐக்கிய தேசியக்கட்சியில் ஒருவர் பிரதிநிதித்துவம் பெற கிட்டத்தட்ட 65 ஆயிரம் வாக்குகளை கட்டாயம் பெற வேண்டியிருக்கும்.
பொதுஜனபெரமுனவில், ‘சிறந்த எதிர்­கா­லத்­திற்­கான தொழில்சார் நிபு­ணர்கள்’ (வியத்­கம) அமைப்பின் வேட்பாளர்கள் மூவர் அல்லது இருவர் போட்டியிடுவர், அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு ஜனாதிபதி பிரயத்தனம் எடுப்பார், இதுதவிர திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த ஆகியோர் அதிகபடியான வாக்குகளை பெறுவர், மஹிந்தானந்த அளுத்கமகேயின் வாக்குவங்கியில் கொஞ்சம் சரிவு இருந்தாலும் அவர் வெற்றி பெறலாம். இதற்கடுத்தபடியாக கெஹெலியவும் தெரிவாவார்.

அடுத்தபடியாக எஸ்.பி.திஸாநாயக்க, அனுராத ஜயரத்ன ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவும். சரத் அமுனுகம பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அவரும் முன்னிலை வகிப்பார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பொதுஜனபெரமுனவுடன் இணைந்த ஆனந்த அளுத்கமகே பிரதிநிதித்துவத்தை இழப்பார்.

விருப்புவாக்குகளின்படி,
01. லொஹான் ரத்வத்த
02. திலும் அமுனுகம
03. வியத்கம உறுப்பினர்  01
04. வியத்கம உறுப்பினர்  02
05. மஹிந்தானந்த அளுத்கமகே
06. கெஹெலிய ரம்புக்வெல
07. அனுராத ஜயரத்ன
08-09 எஸ்.பி. திசாநாயக்க அல்லது சரத் அமுனுகம

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இம்முறை கண்டியில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களாக கிரியெல்ல, மயந்த திஸாநாயக்க, லக்கி, ஹலீம், ஹக்கீம் இருப்பர். இவர்கள் தவிர கண்டியில் சுஜீவ சேனசிங்க களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், திலின பண்டார தென்னகோனும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம். வேலுகுமாருக்கும் பட்டியலில் இடமளிக்கலாம். இவர்கள் அனைவரும் போட்டியிடுகின்றனர் என வைத்துக்கொள்வோம்.

லக் ஷ்மன் கிரியெல்ல தான் முன்னிலை வகிப்பார். சுஜீவ சேனசிங்கவுக்கு புதிய வாக்குகள் அதிகபடியாக கிடைக்கும். ஹலீம் சிங்கள வாக்குகளை இழப்பார். ஹக்கீம் சிலவேளை கண்டியில் களமிறங்காமலும் இருக்கலாம். ஆனால் அவர் கண்டியில் போட்டியிடுவதாகவே வைத்துக்கொள்வோம்.

கண்டி பட்டியலின் படி ஐ.தே.க.வில்
01. லக் ஷ்மன்  கிரியெல்ல
02. சுஜீவ சேனசிங்க
03. ரவூப் ஹக்கீம்
04. அப்துல் ஹலீம்
05. திலின பண்டார தென்னகோன்
———————-
06. மயந்த திஸாநாயக்க
07. வேலுகுமார்
08. லக்கி ஜயவர்தன

இப்படி பட்டியல் செல்லும் என எதிர்பார்க்கலாம்.

பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் அதிகபடியாக 30 ஆயிரம் வாக்குகள் வரை செல்லலாம். அதுவும் பாரிஸ் ஹாஜியார் வேட்பாளராக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவருடன், அக்குறணை பிரதேச சபை தவிசாளர் போட்டியிட்டாலே 30 ஆயிரம் வாக்கு வரை செல்லலாம். உண்மையில் 70 வீதமான முஸ்லிம் வாக்குகள் பொதுஜன பெறமுனவுக்கு திருப்ப முடிந்தால் பொதுஜன பெறமுனவின் ஊடாக பிரதிநிதி உறுதிசெய்யலாம். ஆனால், 1989 ஆம் ஆண்டு விகிதாசார தேர்தலுக்கு பின்னர் முஸ்லிம் வாக்குகள் எப்படி பிரிந்திருக்கிறது என்பதை நோக்குமிடத்து பொதுஜன பெறமுன அல்லது சுதந்திரக் கட்சி ஊடாக கண்டியில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதென்பது குதிரைக்கொம்பான கதையே.

பொதுஜன பெரமுனவில் கேட்கும் வேட்பாளருக்கு வாக்குகள் அதிகரிக்க அதிகரிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறைந்துகொண்டே செல்லும்.

ஏனெனில் கண்டி மாவட்டத்தில் 1 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் அளிக்கப்படும் என கணிக்கலாம். அதில் 30 ஆயிரம் வாக்குகள் என்பது 30 வீத முஸ்லிம் வாக்குகள். எனவே ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளருக்கு 70 வீத வாக்குகள் கட்டாயம் கிடைத்தாக வேண்டும். இல்லையேல் 1956 இலிருந்து கண்டியில் பாதுகாக்கப்பட்டு வரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இம்முறை இல்லாமல் போய்விடும்.

1956, 1960 ஆகிய தேர்தல்களிலும் 2010 பொதுத் தேர்தலிலும் மாத்திரமே சுதந்திரக் கட்சி ஊடாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைத்தது. 1956, 1960 களில் தொகுதி முறைத் தேர்தல். அப்போது முஸ்லிம்கள் இனவாதிகளாக பார்க்கப்படவில்லை. கண்டி முஸ்லிம்களுக்கு கௌரவமும் மகத்தான வரவேற்பும் இருந்த காலம். இன்று அந்நிலமை இல்லை. 2010 ஆம் ஆண்டில் பைஸர் முஸ்தபா அதிகபடியான சிங்கள வாக்குகளையும் கணிசமான அளவும் முஸ்லிம் தமிழ் வாக்குகளையும் பெற்றதால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 8 ஆவது பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.  25 வருட காலம் பாரளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்ற அப்துல் காதர் ஹாஜியார் 2015 கண்டியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெறுமனே 7500 வாக்குகள் வரை மாத்திரமே பெற்றார். மறுபுறம் சிம்சான் 4500 வாக்குகளே பெற்றார் என்பதை கவனத்திற் கொள்ளலாம்.

கண்டிக்கு இன்னொரு தலையிடி வரலாம். அ.இ.ம.கா. தனது பிரதிநிதியை களமிறக்க ஐ.தே.க.விடம் கோரலாம். வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது. சிலபோது தனித்து ரிஸாடின் அ.இ.ம.கா. களமிறங்குவதால் 10 ஆயிரம் வரை மாவட்டம் முழுக்க ஓடித்திரிந்து வாக்குகள் எடுக்கலாம். இதனால், கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகலாம். அத்துடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கண்டியில் போட்டியிட்டு 3000 வாக்குகள் வரை பெற்று முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்க முயற்சிக்கலாம். இந்த முன்னெடுப்புகள் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளாகவே அமையும். சிலபோது முஸ்லிம் சுயேட்சை அணிகளும் களமிறங்கலாம் என்பதை முஸ்லிம் சமூகம் மனதில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *