இலங்கை மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய முதலாவது போட்டியில் இலங்கை வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடும் பிரயத்தனத்தின் பின்னர் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது.

8 ஆம் இலக்க வீரராகக் களமிறங்கிய வனிந்து அசரங்க 39 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பௌண்டரிகளுடன் 42 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

கொழும்பு ssc மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 10 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

என்றாலும், ஷாய் ஹோப் 115 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 41 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தினர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் இசுரு உதான 3 விக்கெட்களை வீழ்த்தினார். ​

பதிலளித்தாடிய இலங்கை சார்பாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன – அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி 111 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களுடனும் அவிஷ்க பெர்னாண்டோ 50 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 168 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

குசல் ஜனித் பெரேரா 42 ஓட்டங்களையும் திசர பெரேரா 32 ஓட்டங்களையும் பெற்று நம்பிக்கையளித்தனர்.

வனிந்து அசரங்கவுடன் ஒன்பதாம் விக்கெட்டில் 27 ஓட்டங்கள் பகிரப்பட காரணமாக இருந்த லக்சான் சந்தகேன் வெற்றிக்கு ஓர் ஓட்டம் தேவையான நிலையில் ரன் அவுட் ஆனார்.

இலங்கை அணி 49 .1 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை அடைந்தது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *