பொறுப்புக் கூறாமல் தப்பிக்கவே முடியாது! – நாடாளுமன்றில் கோட்டா அரசை எச்சரித்தார் சரவணபவன் எம்.பி.

“இலங்கை அரசு பொறுப்புக்கூறலில் இருந்து தப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இலங்கையைச் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்.

இலங்கையின் இரண்டு ஜனாதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்ற இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு இன்னொரு நாடு பயணத்தடை விதிக்கிறது என்றால், அது இலங்கை நாட்டுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றே கருதவேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-

“சவேந்திர சில்வா மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் என்பதுடன் அவர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இராணுவப் பிரதானியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நடவடிக்கைக்கான
முன்னெச்சரிக்கை

ஒரு நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஒரு படைத்தளபதி மீது இன்னொரு நாடு பயணத்தடை விதிக்கின்றது என்றால் அதுவும் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானமென்றே கருதப்படுகின்றது.

இலங்கை அரசு சர்வதேச நியமங்களை அலட்சியப்படுத்தி வருமானால் சர்வதேசம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளுக்கு இது ஒரு முன்னறிவித்தல் என்றே நாம் கருதுகின்றோம்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது சவேந்திர சில்வாவைக் கட்டளைத் தளபதியாகக் கொண்டிருந்த 58ஆவது படைப்பிரிவால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை எனவும், நம்பகத்தன்மை வாய்ந்தவை எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரைப் பொறுப்புக் கூறவைக்கவும், பாதுகாப்புத்துறையை சீர்திருத்தவும், நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர அதன் பிறகடமைகளை ஆதரிக்கவும் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்வதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கை அரசு சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும், ஒரு தலைப்பட்சமானவை எனவும் தெரிவித்து சவேந்திர சில்வா மீதான பயணத்தடையை நீக்கும்படி கோரியுள்ளது. மேலும், வெளிவிவகார அமைச்சு அமெரிக்கத் தூதுவரை அழைத்து மேற்படி தடை தொடர்பாகத் தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக 2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசு சர்வதேச வழக்குரைஞர்கள், நீதியாளர்கள் துணையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இப்போது நம்பத்தகுந்ததும், தீவிரமானதுமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே சவேந்திர சில்வாவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் பயணத்தடை விதிக்கப்பட்டது என அமெரிக்கா கூறுகின்றது. ஆனால், அதே சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என இலங்கை கூறுகின்றது. இரு கருத்துகளும் ஒன்றுக்கொன்று நேர்விரோதமானவை.

2015இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மேற்படி போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது மேற்கொள்ளப்படாத நிலையில் இலங்கை அரசுக்கு இரண்டு தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்களாகிவிட்ட போதிலும் அது தொடர்பான விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அந்தவகையில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படவில்லை. அதைவிட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஐந்து வருடங்களின் பின்பு தாங்கள் நிராகரிப்பதாக தற்போதைய கோட்டாபய அரசு தெரிவித்துள்ளது.

விசாரணை நடத்தியிருந்தால்
இலங்கை தப்பியிருக்கலாம்

ஒரு தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அது விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலமே குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பதைக் கண்டறியமுடியும். மேற்படி விசாரணைகள் நடத்தப்பட்டு சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்பது நிரூபிக்கப்பட்டிருந்தால், அமெரிக்கா பயணத்தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்க முடியாது.

ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் தலைமைகள் எனப் பல்வேறு தரப்பினரும் விசாரணைகள் மேற்கொள்ளும்படி கோரியும் அது நடத்தப்படவில்லை.

உண்மை வெளிப்பட்டுவிடும்
என்றே விசாரணையில்லை

எனவே, இந்த விசாரணைகளை இலங்கை அரசு நடத்தாமல் தட்டிக்கழித்து வந்தமையும், தற்சமயம் ஐ.நா. தீர்மானத்தையே நிராகரிப்பதாக அறிவித்திருப்பதற்குமான காரணம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் அரச படையினரின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நிரூபிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் என்றே நாம் கருதுகிறோம்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு, சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கின்றது. அமெரிக்காவோ நம்பத்தகுந்த, தீவிரமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறுகின்றது. எப்படியிருப்பினும் ஒரு விசாரணையை மேற்கொண்டிருந்தால் அமெரிக்காவால் முன்வைக்கப்படக்கூடிய ஆதாரங்களை முறியடித்திருக்கலாமல்லவா?

எனவேதான் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் சர்வதேச அரங்கில் நிரூபிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தாலேயே விசாரணைகள் நடத்தப்படுவது தட்டிக்கழிக்கப்பட்டு வந்தது என்பதை நாம் திடமாக நம்புகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இலங்கையால் அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தை நிராகரித்திருப்பதும் இந்த விடயங்களை மேலும் ஆதாரப்படுத்துகின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *