‘ராக்கிங்’கில் ஈடுபட்ட மாணவரின் வீடுகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு! – யாழ். பல்கலை நிர்வாகம் ஆராய்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் ரீதியான ராக்கிங் கொடுமையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மாணவர்களின் வீடுகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி வளாகத்தின் புதுமுக மாணவிகளுக்கு அலைபேசி ஊடாக பாலியல்துன்புறுத்தல் விடுத்ததாக இரண்டாம் வருட மாணவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இது தொடர்பில் 10 பேர் கொண்ட விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது. அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக இரண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழத்துக்குள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த மாணவனின் வீடு மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாணவனின் பெற்றோர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். தமது மகனுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இ;டம்பெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டுள்ளது. பகிடிவதையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோரவேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட்;டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு கடந்த வாரம் இரண்டு தடவைகள் கிளிநொச்சிக்குச் சென்று மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளது. இதன்போது, கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை இல்லை, மலசலகூடம் ஒழுங்காக இல்லை என்று மாணவர்கள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்துள்ளதுடன், பகிடிவதை தொடர்பான விசாரணையை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்பப்பீடத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பகிடிவதைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனுடன் தொடர்புடைய மாணவி, பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் என்றும், அவருக்கு எதிராக வகுப்புத் தடை விதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டபோதும் தொழில்நுட்பப்பீடத்தின் உயர்மட்டத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.

(‘உதயன்’ – 16.02.2020)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *