அமெரிக்க வழங்கிய தீர்ப்புக்கு இலங்கை வழங்கிய பதில்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வீசா தடை தொடர்பிலான தமது பதிலை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்லிப்ஸை வெளிவிவார அமைச்சில் இன்று சந்தித்தபோது, அரசாங்கத்தின் பதில் வழங்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அமெரிக்கத் தூதுவரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் தடை விதிக்கப்படுமாயின் அது நீதியான தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விடயம் அல்ல என  இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்திற்கும் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு உடனடியாக அறிவிப்பதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.

நாளைய தினம் அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர்களுடனும் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தௌிவுபடுத்தியதுடன் நாடு தொடர்பில் பிரச்சினை ஏற்படுகையில் எமக்கு கட்சி முக்கியமல்ல எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார், அமெரிக்காவின் தீர்மானத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இராணுவத் தளபதி எனக்கூறுவது வெறுமனே ஷவேந்திர சில்வா மாத்திரமல்ல என்பதுடன் இலங்கையின் இராணுவத் தளபதிக்கு எதிராகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, நாட்டு மக்கள் என்ற வகையில் எமது கருத்தூடாக அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை நாம் வெளிப்படுத்த பின்நிற்பதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *