மகளிர் தினத்தன்று முதல்முறையாக பெண்களுக்கு மதுபான கடை திறக்கப்படவுள்ளது!

பெங்களூரில் நாட்டில் முதல்முறையாக பெண்களுக்கு என தனியாக பார் மற்றும்  உணவகம் வரும் மார்ச் 8ம் தேதி திறக்கப்பட உள்ளது. ‘மது நாட்டிற்கும்  வீட்டிற்கும் கேடு’ என்பதால் அதனை தங்கள் பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும்  என பல தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மதுபானம் விற்பனையில்  பெண்கள் பெரிதும் துயரத்தை சந்திக்க நேர்கிறது. குடும்பங்கள் வறுமையில்  வாடுவதற்கு முதல் காரணமாக, ஆண்களிடம் உள்ள மது பழக்கம் உள்ளது. வீட்டின் குடும்ப  தலைவர்கள் மதுபழக்கத்திற்கு ஆளாவதால் குழந்தைகள் தங்கள் கல்வியை இழந்து,   உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இழந்து தவித்து வருகின்றனர். பெங்களூருவில்  வார இறுதியில் நள்ளிரவு வரை மதுபான கடைகள் திறந்து வைத்துள்ளதால்  ஏராளமானோர் குடித்து விட்டு வாகனத்தில் செல்லும் போது விபத்துகள்  நடைபெறுகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு  நடத்தி வருகின்றனர். இருப்பினும் விபத்துகள் குறையவில்லை.

இந்நிலையில்,  பெங்களூருவில் பெண்களுக்கு என்று தனியாக அடுத்த மாதம் 8ம் தேதி மகளிர் தினத்தில் மதுபான பார் திறக்கப்படுகிறது.  பெங்களூரு பிரிகேட் சாலையில் பெண்களுக்கு என தனி பார் மற்றும் உணவகம்  அமைக்கப்பட்டுள்ளது. 2,500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த  பாருக்கு, ‘மிஸ் அண்ட் மிஸ் பார் அண்ட் ரெஸ்டாரன்ட் அண்ட் லஞ்ச்’ என  பெயரிடப்பட்டு உள்ளது. இந்த உணவகத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால்,  பவுன்சர்கள் முதல் உரிமையாளர்கள் வரை அனைவரும் பெண்களாகவே உள்ளனர்.  இது,  மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 1 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு  சேவை வழங்கும். இது குறித்து இந்த பாரின்  உரிமையாளர் பஞ்சூரி வி சங்கர் கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்களின் வரவேற்பை  பொறுத்து இதுபோன்ற உணவகங்கள் நகரம் முழுவதும் திறக்கப்படும்,’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *