கோட்டாவின் பழிவாங்கலால் யாழ். மாவட்ட செயலர் ஓய்வு! – மட்டக்களப்பைச் சேர்ந்தவர் புதிதாக நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சுக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் புதிய செயலராக மட்டக்களப்பைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேசன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கென்யாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றியதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேச சபைகளின் உயர் அதிகாரியாகவும் உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகனுக்கு என்ன காரணத்துக்காக இடமாற்றம் வழங்கப்படுகின்றது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவரைக் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு பழிவாங்கும் நோக்குடனேயே இடமாற்றம் வழங்கியுள்ளது எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஓய்வுபெறுவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், அரச அலுவலர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்படுதில்லை என்ற நடைமுறை இங்கு மீறப்பட்டுள்ளது என நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்குவைத்து வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. கடந்த 5ஆம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு அனுமதியும் பெறப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், மாவட்ட செயலர்களின் இடமாற்றம் தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன் இடமாற்றப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலராக கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று யாழ். மாவட்ட செயலருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் தான் ஓய்வுபெறுவதாக, மாவட்டத்திலுள்ள திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *