குஜராத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா எனச் சோதிக்க, உள்ளாடைகளை கழற்றச்சொல்லிக் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது ஸ்ரீ சஜ்ஜானந்த் மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

2012ல் நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் கடந்த 2014லில் ஸ்ரீ சுவாமிநாராயண் கன்யா மந்திர் கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் இருக்கும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்து மாணவர்களை கட்டாயப்படுத்திவருகிறது.

குறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவில், உணவகம் போன்ற பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை செய்த கல்லூரி” : குஜராத்தில் கொடூரம்!

அதுமட்டுமின்றி, மாதவிடாய் காலங்களில் சக மாணவிகளுடன் அமரக்கூடாது என்ற விதியையும் வகுத்துள்ளனர். இந்நிலையில், அக்கல்லூரியில் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.

விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் அடிக்கடி மாதவிடாய் எனக் கூறி விடுமுறை எடுப்பதாகவும், சில நேரங்களில் விதிமுறைகளைச் மீறி செயல்படுவதாகவும் மாணவிகள் விடுதி காப்பாளர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து கல்லூரி முதல்வர் எம்.ரணிங்கா இதுகுறித்து உடனடியாக விசாரிக்கும்படி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரி முதல்வரின் உத்தரவின் பேரில் நிர்வாகம் இரண்டு பேரை நியமித்து மாணவிகளின் மாதவிடாய் விடுமுறை பற்றி விசாரிக்கச் சொல்லியுள்ளது. நேற்றைய தினம் மாணவிகள் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். அப்போது விடுதியில் இருந்து வந்த மாணவிகள் 68 பேரை சோதனை செய்வதற்காக மீண்டும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

“மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை செய்த கல்லூரி” : குஜராத்தில் கொடூரம்!

அங்குள்ள கழிப்பறையில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றுமாறு வற்புறுத்தி மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா எனச் சோதனை செய்துள்ளனர். சில மாணவிகள் சங்கடமுற்று, தங்களின் உள்ளாடைகளைக் கழற்ற மறுத்துள்ளனர். ஆனால் அவர்களை வலுக்கட்டாயமாகக் கழற்றச் சொல்லி நிர்வாகத்தினர் மிரட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளித்ததோடு, கல்லூரி நிர்வாகத்தின் பல மோசமான விதிமுறைகளைப் பற்றியும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் நல அமைப்பு கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வரிடம் விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைத்துள்ளது. இது அப்பட்டமான தீண்டாமைக் கொடுமை, மனிதத் தன்மையற்ற செயல் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.