இந்தியாவில் இந்திதான் தாய் மொழி கிரிக்கெட் வர்ணனையாளரின் சர்ச்சை பேச்சு

இந்தியை விட சிறந்த மொழி எதுவும் இல்லை, இந்தி தான் நமது தாய்மொழி, இந்தியாவில் ஒவ்வொரு இந்தியருக்கும்  இந்தி தெரிந்திருக்க வேண்டும்” – ரஞ்சி கோப்பை ஆட்டம் ஒன்றில் வர்ணனையாளர் பேசிய இந்த கருத்துக்கள் சமூக வலைதளத்தில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதையடுத்து அவர்கள் மன்னிப்பு கேட்கும் சூழலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

என்ன நடந்தது?

கர்நாடகா மற்றும் பரோடா இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட்  வீரரான மொஹிந்தர் அமர்நாத்தின் தம்பி ரஜிந்தர் அமர்நாத் மற்றும் சுஷில் ஜோஷி இருவரும் வர்ணனையாளராக பணியாற்றியுள்ளனர்.

ஒரு இந்தி வர்ணனையாளராக சுனில் கவாஸ்கர் எப்படிச் செயல்படுகிறார் என ஒரு பேச்சு வந்தபோது, ”இந்தியாவில், ஒவ்வொரு இந்தியரும் இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுவே நமது தாய்மொழி. இந்தியை விட சிறந்த மொழி எதுவும் இல்லை” என ரஜிந்தர் கூறினார்.

அதனை ஆமோதித்த சுஷில் தோஷி” நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் ஆனால்  இந்தி பேசுகிறோம் என சிலர் கூறுகிறார்கள் அதில் என்ன பெருமை இருக்கிறது? நீங்கள் இந்தியாவில் தான் வசிக்கிறீர்களா அப்படியெனில் நீங்கள் இந்தியாவின் தாய் மொழியை பேசித்தானே ஆக வேண்டும்” என கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது மட்டுமின்றி சமூக வலைதளத்திலும் வைரலாக பரவியது.    ”இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது, பெரும்பாலான மாநிலங்களுக்கு அவர்களது தாய் மொழி இருக்கிறது #இந்தி திணிப்பை நிறுத்து” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *