மேல் மாடியில் மனைவி கீழ் மாடியில் கள்ளக் காதலியுடன் குடும்பம் நடத்திய யாழ்.மைனர்

வெளிநாடுகளிற்கு செல்லும் நம்மவர்கள் நிலத்தை, வாழ்வின் பண்பாட்டை, கலாசாரத்தை உதறிவிட்டு செல்வதில்லை. அவர்கள் இன்னொரு தேசத்தில் பதியமிடப்பட்டவர்கள். புலம்பெயர்ந்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையானவர்கள்தான் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். மிகுதியானவர்கள் பொருளாதார அகதிகள்தான். போர் அவர்களின் புலப்பெயர்வை இலகுவாக்கியது.
புலம்பெயர்ந்தவர்களின் சிறிய எண்ணிக்கையானவர்கள் தத்தமது நாடுகளில் திருமணம் செய்து கொண்டாலும், மிகப்பெரும்பான்மையானவர்கள் உள்ளூரில்த்தான் திருமணம் செய்கிறார்கள். இதற்கு இனஅடையாளம் மட்டும்தான் காரணமா என்றால் சொல்லத் தெரியவில்லை. ஏனெனில், புலம்பெயர்ந்த முதல்தலைமுறையினரின் பெண்பிள்ளைகள் கணிசமாக வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைபவர்களை விட, இலங்கையில் திருமணம் செய்யவே பெரும்பான்மையானவர்கள் விரும்புகிறார்கள்.

அப்படியானால் என்ன காரணம்? உள்ளூரில் உள்ள பெண்கள்தான் ஒழுக்கமானவர்கள் என்பதைப் போன்ற ஒருவகையான ஆழ்மன பிம்பம் உள்ளது. இதனை மெய்ப்பிக்கும் விதமான நிறைய உரையாடல்கள் ஆண்கள் மத்தியில் நடக்கும். பெண்களை பாலியல் பொருட்களாக நோக்கும் நமது ஆண்களின் பல்லாயிரம் ஆண்டுகால சிந்தனை இதன் பின்னணியில் இருக்கலாம்.
புலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் திருமணம் செய்வது சிக்கலான விவகாரமல்ல. எல்லா விடயங்களையும்போல அதுவும் சாதக, பாதக அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்க சாதகமென்றால், அழகிய பெண்பிள்ளைகள் பிறக்கும் ஏழைக்குடும்பங்கள் பொருளாதாரத்தில் முன்னுக்கு செல்லலாம். பாதகமென்றால், திருமண சந்தையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தியதை சொல்லலாம்.
அழகிய பெண்பிள்ளைகளை கண்டால், இது வெளிநாட்டு பார்சலாகத்தான் போகும் என இளைஞர்கள் உரையாடும் கலாசாரம் உருவாகியுள்ளது.
பத்தொன்பது, இருபது வயதானதும் நமது பெண்களில் பெரும்பாலானவர்களின் அடுத்த இலக்கு வெளிநாட்டு திருமணம்தான். இது அவர்களின் தவறல்ல. அப்படியான சமூகஅமைப்பொன்றை நோக்கி அவர்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை பல பெண்களிற்கு அட்சய பாத்திரமாக காண்பிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நீங்க இருக்கும் சுலபமான வழியிது. இதனால் பருவமடைந்தது முதலே வெளிநாட்டு மாப்பிள்ளை கனவுடன் வளரும் பெண்பிள்ளைகள் நம்மத்தியில் உள்ளனர். எப்படியும் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு துணையாகிவிடுவேன் என வேலைக்குகூட செல்லாமல் இருப்பவர்களையும் கண்டிருக்கிறேன்.
வெளிநாட்டு மாப்பிள்ளை கனவு நிறைய விபரீதங்களையும் உருவாக்கிவிடுகிறது. வயதில் கூடியவன், ஏற்கனவே திருமணம் செய்தவன், மதுவிற்கு அடிமையானவன், தவறான தொடர்புகள் கொண்டவன் என விபரங்களை அறியாமல் வில்லங்கத்தில் மாட்டுபவர்கள் உள்ளனர். வில்லங்கம் பல பெண்களை ஆயுளுக்கும் மீள முடியாத குழியில் தள்ளிவிடலாம். வில்லங்கம் விதவிதமான வடிவங்களில் வரும்.
அப்படியொரு கதைக்கு சொந்தக்காரிதான் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). யாழில் உள்ள பெண்கள் அமைப்பொன்றில் நீதியும், பாதுகாப்பும் வேண்டி அவர் தஞ்சமடைந்தார். அப்பொழுதுதான் அவரது கதையை அறிந்தேன்.
யாழில் உள்ள வர்த்தகர் ஒருவர். அவர் சாரதி பயிற்சி நிறுவனமும் வைத்திருக்கிறார். அவரது மகன் ஐரோப்பாவிலிருந்து ஊருக்கு வந்த சமயத்தில் பெண் பார்த்தார்கள். கவிதாவை பிடித்துப் போக உடனடியாக திருமணம் நடந்தது. கவிதா பார்ப்பதற்கு அழகான தோற்றத்துடையவள். அறிவாளி. குடும்பம் நன்றாகவே சென்றது. ஒரு வருடத்தில் ஆண்குழந்தையும் பிறந்தது.
மனைவி இலங்கையிலேயே இருக்க கணவன் மட்டும் ஐரோப்பாவிற்கு சென்று, விடுமுறைகளில் வந்து போனான். கணவனின் தந்தை, தாயுடன் இருந்ததால் கவிதாவிற்கு வாழ்க்கை தொடர்பான எந்த சஞ்சலமும் இருக்கவில்லை.
ஒரு விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. தனது தந்தையின் வர்த்தகநிலையத்தில் பணிபுரியும் இளம் யுவதியொருவரிற்கும் அவனிற்குமிடையில் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளடைவில் நெருக்கமாகிவிட்டது.
நாகரிகமாக உடையுடுத்தி, எப்பொழுதும் துறுதுறுவென இருக்கும் அந்தப்பெண் வேலையில் இணைந்து சிறிது காலம்தான். தனக்கு திருமணமானதை மறைத்து காதல்வலையை அவன் வீசினான். அவளும் சம்மதித்தாள். பெற்றோருக்கு தெரியாமல் காதல் பறவைகள் உல்லாசமாக பறக்க ஆரம்பித்தன.
இந்த உறவு வலுக்க, கவிதாவை விட்டு விலக ஆரம்பித்தான் அவன். விலகல் இருவரிற்கிடையிலும் அடிக்கடி மோதலை ஏற்படுத்தியது. கணவனின் நடத்தையில் சநதேகம் கொண்ட கவிதா, அவனை இரகசியமாக அவதானித்துள்ளாள். அப்பொழுதுதான் அவனது கள்ளக்காதல் தெரியவந்தது. அவனது தந்தை, தாயிடம் முறையிட்டு அழுதாள். அவர்களும் அவனது நடத்தையை கண்டித்தார்கள். புதிதாக வேலைக்கு வந்த அந்த பெண்ணையும் வேலையை விட்டு நிறுத்தினார்கள்.
ஆனால் உல்லாசப் பறவைகளை யாராலும் பிரிக்க முடியவில்லை. அவர்களின் இரகசிய உறவு தொடர்ந்தது. விடுமுறை முடிந்தும் திரும்பிபோக மறுத்து கணவன் இங்கேயே இருக்க ஆரம்பித்தான். இதனால் கவிதாவின் சந்தேகம் அதிகரித்தது. அவனிற்கு வேறும் பெண்களுடன் தொடர்பிருப்பதாக சிலர் அவளிடம் கூறினார்கள்.
திடீரென ஒருநாள் கணவன் சொன்னான்- தான் சிலகாலம் கொழும்பில் தங்கியிருக்க போவதாக. இதற்கு கவிதா சம்மதிக்கவில்லை. தானும் அங்கு வரப்போவதாக அடம்பிடித்து சென்றாள்.
கவிதாவின் வரவை விரும்பாவிட்டாலும், தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டான். கொழும்பில் ஒரு பிளற் எடுத்து கவிதாவையும் பிள்ளையையும் தங்க வைத்தான். சிறிதுகாலத்தின் பின்னர்தான் கவிதா அறிந்தாள்- கீழ் பிளற்றில் இருப்பது அவனது கள்ளக்காதலிதான் என்பதை. அப்பொழுது எல்லாம் தலைமுழுகியிருந்தது.
கொழும்பு சென்ற புதிதில் தனிமையிலிருந்து தப்பிக்க கவிதா வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். கணவனும் முழுச்சம்மதத்துடன் அனுப்பினான். அவள் மாலையில் வீடு திரும்பும்போது பிள்ளை விறைப்பாக பயந்து போயிருப்பதைப் போல உணரத் தொடங்கினாள். குழந்தைக்கு ஏதோ நடக்கிறது என்பதை ஊகித்த கவிதா அதை கண்டுபிடிக்க முடிவு செய்தாள்.

ஒருநாள் அலுவலகம் சென்றவள் சிறிதுநேரத்திலேயே திரும்பி வந்தாள். யன்னல் வழியாக பார்த்தபோது அவளை உலகம் கைவிட்டதாக உணர்ந்தாள். கீழ்தளத்தில் குடியிருந்த கள்ளக்காதலியும், கணவனும் உல்லாசமாக இருந்ததையும், குழந்தையை கதிரையில் கட்டிவைத்திருந்ததையும் கண்டாள். உடனே அதனை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவுசெய்ய ஆரம்பித்தாள்.
மறைக்கும் வரைதானே இரகசியம். அம்பலமான பின்னர் மறைவெதற்கு? கவிதாவைிடமிருந்து கையடக்கத்தொலைபேசியை பறித்த கணவன் நிலத்தில் எறிந்து உடைத்ததுடன், அவளையும், பிள்ளையையும் கட்டிவைத்து அடித்தான். கள்ளக்காதலியை கைவிட முடியாதென்றும், கவிதா வேலைக்கு சென்ற பின்னர் பிள்ளையை பார்க்க அவள் வருவாள் என்றும் கணவன் முடிவாக கூறிவிட்டான்.
இதற்கு மேலும் அவனுடன் வாழ முடியாதென தீர்மானித்த கவிதா மறுநாளே பிள்ளையுடன் யாழ்ப்பாணம் வந்துவிட்டாள். தன்னைதேடி வீட்டிற்கு செல்வார்கள் என்பதை ஊகித்து நண்பியொருத்தியின் வீட்டில் தங்கினாள். அங்கிருந்து கொண்டு தனக்கும், பிள்ளைக்கும் பாதுகாப்பு கோரி யாழில் இயங்கும் மகளிர் அமைப்பொன்றின் துணையை நாடினாள்.
அவனிடமிருந்து சட்டப்படி விலக முடிவுசெய்தாள். பிள்ளையை தன்னிடம் ஒப்படைக்கும்படியும், இல்லாவிட்டால் பிள்ளையை கடத்துவேன் என்றும் அச்சுறுத்தியுள்ளான். அவனது பெற்றோரும் பிள்ளையை ஒப்படைக்கும்படி அல்லது கணவனுடன் ஒத்திசைவாக வாழும்படி கேட்டார்கள்.
அந்த குடும்பத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாதென உணர்ந்ததன் பின்னர் பொலிஸ் நிலையம் சென்றதாக கூறுகிறார் கவிதா. விடயம் பொலிஸ்வரை சென்றதையடுத்து அவன் ஐரோப்பாவிற்கு தப்பியோடி விட்டான். அவனை நம்பிச்சென்ற கள்ளக்காதலியும் நடுத்தெருவில் நிற்க வேண்டியதாகி விட்டது.
வயதான தனது பெற்றோர்களுடன் தங்கியிருப்பது அவர்களிற்கு மனக்கஸ்டத்தை ஏற்படுத்துமென நினைத்த கவிதா, பிள்ளையுடன் யாழ்ப்பாணத்தில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து குடியிருக்கிறார்.
எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்களை கொண்டுவருமாறு பாரதி சொன்னான். நம்மவர்கள் சிலர் காவாலித்தனங்களையல்லவா கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *