பங்களாதேஷில் முதல்முறையாக இஸ்லாமிய முறைப்படி நடந்த பாலியல் தொழிலாளியின் இறுதிச் சடங்கு

வங்கதேசத்தில் முதல்முறையாக இஸ்லாமிய முறைப்படி நடந்த பாலியல் தொழிலாளியின் இறுதிச் சடங்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
அங்கு நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு வழக்கத்தை உடைத்து இந்த சடங்கு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பாலியல் தொழில் நடக்கும் கிராமமான டெளலாட்டியாவில் பணிபுரிந்துவந்த ஹமிடா பேகம் தனது 65 வயதில் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் பாலியல் தொழில் சட்டவிரோதமான தொழில் அல்ல. ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இறுதி பிரார்த்தனை செய்வதில்லை என இஸ்லாமிய தலைவர்கள் மறுத்துவந்தனர்.
பாலியல் தொழிலாளிகள், எந்தவித பிரார்த்தனையும் இல்லாமல் பொதுவாக புதைக்கப்பட்டுவிடுவார்கள்; அல்லது அவர்கள் நதியில் வீசப்படுவார்கள்.
பாலியல் தொழிலாளிகள் சிலர் உள்ளூர் போலீஸாரின் துணையுடன் இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை பேகமிற்கும் இதுதான் நடந்திருக்கும்.
“முதலில் அந்த மதகுரு பிரார்த்தனை செய்ய தயங்கினார்,” என பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த போலீஸ் அதிகாரி ஆஷிகுர் ரஹ்மான் குறிப்பிட்டதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
“ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இறுதி பிரார்த்தனை செய்வதை இஸ்லாம் தடுக்கிறதா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.” என்கிறார் ஆஷிகுர்.
இதன் விளைவாக செவ்வாய்க்கிழமையன்று இஸ்லாமிய மதமுறைப்படி பேகமின் இறுதி பிரார்த்தனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *