தனிச் சிங்கள அரசு தேவை! – பொதுத்தேர்தலை இலக்குவைத்து ஞானசார தேரர் இனவாதக் கக்கல்

“ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த – சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் நிறுவவேண்டும்.”

– இவ்வாறு சூளுரைத்துள்ளார் கடும்போக்குடைய இனவாத அமைப்பான பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

கடந்த ஆட்சியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 9 மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். பௌத்த பீடங்களின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமன்னிப்பின் அடிப்படையில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை வெற்றியடையச் செய்வதற்காகத் தீவிர இனவாதப் பரப்புரை நடவடிக்கைகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டிருந்தார்.

தனது அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரசார நடவடிக்கைகளின்போது அவர் தெரிவித்திருந்தார். எனினும், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் மீண்டும் தனது இனவாதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.

அந்தவகையில், கொழும்பிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனவாதத்தைக் கக்கும் வகையில் இவர் கருத்துரைத்துள்ளார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த – சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்தார்கள். இதற்காக பௌத்த – சிங்கள மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நாளில் இருந்து இன்றுவரையில் தான் ஒரு சிங்கள – பௌத்த தலைவன் என்பதைப் பல செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார். அவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பௌத்த – சிங்கள மக்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் பௌத்த – சிங்கள மக்கள் நிறுவவேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்தத் தனிச் சிங்கள அரசு உருவாக வேண்டும்.

நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்துக்கும் தடையாக உள்ளன.

தனிச் சிங்கள அரசில் அடிப்படைவாதக் கொள்கைகளற்ற தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும். அடிப்படைவாதத்துக்குத் துணைபோனார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *