சர்வதேச விருதை வென்ற எலிச்சண்டை

#சர்வதேச விருது #வென்ற ‘எலிச்சண்டை’!
www.puthusudar.lk
சாலையில் நடந்து சென்றுகொண்டு இருக்கும்போது, சாக்கடையின் ஓரத்தில் 2 எலிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்?…
ஒன்று ஒரு கல்லை எடுத்து அந்த எலிகளை நோக்கி வீசுவீர்கள். அல்லது “எலிகள் இப்படி நிறைஞ்சிருக்கிற அளவுக்கு கார்ப்பரேஷன்காரன் விட்டு வச்சிருக்கானே” என்று உள்ளாட்சித் துறையை திட்டுவீர்கள்.
ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் ரவுலி இப்படியெல்லாம் செய்யவில்லை. ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் 2 எலிகள் சண்டையிட்டுக் கொள்வதை அவர் ரசித்துள்ளார். அதைப் புகைப்படமாக எடுத்துள்ளார்.
அப்படி எடுக்கப்பட்ட படத்தை 2019-ம் ஆண்டின் சிறந்த படமாக லண்டனின் நேச்சுரல் ஹிச்டரி மியூசியம் தேர்ந்தெடுத்துள்ளது. போட்டிக்கு வந்த சுமார் 48 ஆயிரம் படங்களில் இருந்து இப்படம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை எடுத்ததைப் பற்றி கூறும் சாம் ரவுலி, “என் நண்பர் ஒருவர் எலிகள் சண்டையிடுவதை வீடியோவாக படம் எடுத்துள்ளார்.
அந்த வீடியோவைப் பார்த்த எனக்கு, அதேபோன்று ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் எலிகள் சண்டையிடுவதை புகைப்படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்காக கேமராவும் கையுமாக பல ரயில் நிலையங்களுக்கு அலைந்தேன்.
பெரும்பாலும் காலை நேரங்களில் ரயில்வே பிளாட்பாரங்களில் எலிகளைத் தேடிக்கொண்டு இருந்தேன்.
நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகுதான் ஒரு ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் மிச்சமாகிக் கிடந்த உணவுக்காக எலிகள் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்க முடிந்தது.
நான் எதிர்பார்த்திருந்த காட்சி இதுதான் என்ற எண்ணம் தோன்ற கேமராவை எடுத்து படங்களை எடுக்கத் தொடங்கினேன்.
பிளாட்பாரத்தின் தரையில் படுத்து அதைப் படமெடுத்தேன். நான் பிளாட்பாரத்தில் படுத்திருப்பதை அவ்வழியாக சென்ற பலரும் வினோதமாக பார்த்தார்கள்.
ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எலிகள் தங்களின் சண்டையை நிறுத்தி அங்கிருந்து செல்லும்வரை படங்களை எடுத்தேன்.
அந்தப் பொறுமைதான் இன்று எனக்கு விருதைப் பெற்றுத்தந்துள்ளது” என்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஸ்டேஷன் ஸ்குவாபிள்’ என்று பெயரிட்டுள்ளார் சாம் ரவுலி.
பொதுமக்களின் வாக்கெடுப்புப்படி இந்தப் படத்துக்கு சிறந்த புகைப்படத்துக்கான விருதை அளித்துள்ளது லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியம்.
“பரபரப்பான நகர வாழ்க்கையில் நாம் சின்னச் சின்ன சுவையான விஷயங்களை தவற விட்டு விடுகிறோம். அவற்றில் பல சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றன. நாம் அவற்றையெல்லாம் ரசித்தால் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்” என்கிறார் சாம் ரவுலி.
இந்தப் படத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியத்தின் இயக்குநர் மைக்கேல் டிக்சன், “மனிதர்கள் நிறைந்துள்ள நகரங்களில் விலங்குகள் எப்படி வாழ்க்கையை நடத்துகின்றன என்பதை இந்தப் படம் துல்லியமாக காட்டுகிறது” என்றார்.
இதே போட்டியில், ஊராங்குட்டான் குரங்கு ஒன்று பாக்ஸிங் கிளவுசுடன் அமர்ந்துகொண்டிருக்கும் படமும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஆரோன் கெகோச்கி என்பவர் எடுத்துள்ளார்.
அதேபோல் 2 ஜாக்குவார்கள் ஒரு அனகொண்டா பாம்பை கவ்விப் பிடித்திருப்பதைப் போன்ற படமும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இப்படத்தை பிரேசிலைச் சேர்ந்த மைக்கேல் சாக்சோகி என்பவர் எடுத்துள்ளார்.

#சர்வதேசவிருது #எலிச்சண்டை #சாம்ரவுலி #லண்டன்மியூசியம் #மைக்கேல் #சாக்சோகி #samrowley #Wildlife #photos #award #Photographer #MartinBuzora #AaronGekoski

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *