கொரோனா தாக்கத்தால் நடுக்கடலில் தத்தளிக்கும் பயணிகள் ஆபத்தில்

பீஜிங்: ஜப்பான் அருகே கடலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சுற்றுலா கப்பலில் உள்ள பயணிகளுக்கு கோவிட் வைரஸ் தாக்குவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கடந்த 1ம் தேதி ஒருவருக்கு மட்டுமே  கண்டுபிடிக்கபப்ட்ட இந்த நோய், நேற்று 174 ஆக அதிகரித்தது. இதனால், கப்பலில் .உள்ள 3700 பயணிகளும் உயிரை கையில் பிடித்தப்படி தவித்து வருகின்றனர். மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில்  பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட 28 நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த நோயை குணமாக்க,  இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால், சீனாவில் இதன் தாக்குதலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரையில் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்த வைரஸ் தாக்கும் அபாயம்  காரணமாக, சீன நாட்டு மக்கள் வெளியே வர பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார். சீனாவில் இந்நோயை கட்டுப்படுத்த, உலக சுகாதார  அமைப்பைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவும் நேற்று முன்தினம் முதல் களமிறங்கி இருக்கிறது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தில்தான் உயிர் பலி அதிகமாக இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக ஹாங்காங்கில் இந்த வைரஸ் பாதிப்பு  அதிகமாக உள்ளது. இங்கு, கோவிட் வைரசுக்கு ஒருவர் பலியான நிலையில், மேலும் 48 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தைவானில் 18 பேருக்கும், மெகோவில் 10 பேருக்கும் பாதிப்பு உள்ளது.  உலகையே அச்சுறுத்தும் இந்த வைரசால் பீதி அடைந்துள்ள உலக நாடுகள், சீன நாட்டினர் தங்கள் நாடுகளுக்கு வர தடை விதித்துள்ளன.

இந்நிலையில், ஜப்பானில் நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பிரிட்டனை சேர்ந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சுற்றுலா கப்பலில், கோவிட் வைரசால் பாதிக்கப்படுேவார் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இக்கப்பலில் 57  நாடுகளை சேர்ந்த மொத்தம் 3,700 பயணிகள் உள்ளனர். இவர்களி–்ல 138 இந்தியர்களும் அடங்குவர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே பயணிகள். மற்றவர்கள் கப்பலின் ஊழியர்கள். கடந்த மாதம் 20ம் தேதி ஜப்பானில் இருந்து ஹாங்காங்  சென்று விட்டு, மீண்டும் ஜப்பான் திரும்பியபோது இக்கப்பலில் 80 வயதான ஒருவருக்கு கோவிட் வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் யாரையும் துறைமுகத்தில் இறங்க அனுமதிக்காமல், நடுக்கடலில்  கப்பலை தனிமைப்படுத்தி வைத்துள்ளது ஜப்பான் அரசு. இந்த கப்பலை கடந்த 5ம் தேதி தொடங்கி வரும் 19ம் தேதி வரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

கப்பலில் பயணம் செய்த 3700 பயணிகளில் 300 பேருக்கு முதல்கட்டமாக மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால், கப்பலில்  உள்ள மற்ற பயணிகள் தங்களுக்கும் நோய் பரவி விடுமோ என்ற மரண பீதியில் உள்ளனர். வைரஸ் பாதிக்கப்படாதவர்கள், தங்கள் அறைகளை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சிறை கைதிகளாக காலத்தை  கடத்தி வருகின்றனர். இவர்கள் கப்பலிலும் சுதந்திரமாக இருக்க முடியாமல், ஊருக்குள்ளும் போக முடியாமல் மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இக்கப்பலில் மேலும் 53 பயணிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ  சோதனையில் 39 பேருக்கு வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம், கப்பலில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. இதனால், சீனாவுக்கு வெளியே அதிகபட்சமாக கோவிட்  தாக்குதல் உள்ள இடமாக இந்த சுற்றுலா கப்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள இந்தியர்கள், தங்களை காப்பாற்றும்படி பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சீனாவில் பலி 1113 ஆனது
சீனாவில் உள்ள 31 மாகாணங்களில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 2,015 பேருக்கு கோவிட் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அன்றைய ஒரே நாளில் மட்டும் ஹூபெய் மாகாணத்தில் 94 பேர் பலியாகினர். ஹெனான், ஹூனான்,  ேசாங்கிங் மாகாணங்களில் தலா ஒருவர் என மொத்தம் 97 பேர் பலியாகி உள்ளனர். இதனால்., சீனாவில் கோவிட் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பரவாமல் அரசு தடுக்க வேண்டும்: ராகுல் காந்தி கோரிக்கை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கோவிட் வைரஸ் பாதிப்பு நமது நாட்டு மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பாதிப்பை அரசு தீவிரமாக  எடுத்துக் கொள்ளவில்லை என கருதுகிறேன். இந்த வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க,  மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

‘கோவிட்-19’ முழு அர்த்தம்
நேற்று முன்தினம் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் கருத்தரங்கில், சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு `கோவிட் 19’ என பெயர் சூட்டப்பட்டது. இதில், `co’ என்பது கொரோனாவையும், `vi’ என்பது  வைரஸ் என்பதையும், `d’ என்பது டிசிஸ் (நோய்) என்பதையும் குறிக்கிறது. இதில் 19 என்பது கடந்த ஆண்டையும் குறிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *