சீனாவில் கொரோனா தாக்கத்தால் பிற நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு

புதுடெல்லி: மேற்கத்திய நாடுகளில் இருந்து வழக்கமாக சீனாவுக்கு ஜவுளி ஆர்டர் கொடுக்கும் வர்த்தகர்கள், கொரோனா வைரசால் சீன பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவை ஆட்டிப்படைக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பு பயங்கரமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொழில்துறைகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டு விட்டன. நிறுவனங்கள் இயங்கவில்லை. இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

இதனால், உலக நாடுகளுக்கு சவால் விட்டு வந்த சீன பொருளாதாரத்துக்கு இதனால் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. ஜவுளித்துறையில் கூட சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து ஜவுளி ஆர்டர்கள் சீனாவுக்கு வருவது வழக்கம். இவ்வாறு ஆர்டர் எடுக்கும் சீசனில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாகி விட்டது. இதனால் மேற்கத்திய நாடுகளில் இருந்து சீனாவில் ஜவுளி ஆர்டர் கொடுக்க சீனாவுக்கு பயணம் செய்யும் வர்த்தகர்கள் தங்களின் சீன பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, இந்தியாவுக்கு ஜவுளி ஏற்றுமதிக்கான வர்த்தக வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய டெக்ஸ்டைல் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் டி.ராஜ்குமார் கூறியதாவது: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு வர வேண்டிய ஆர்டகள் இந்தியாவுக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட ஜவுளி ஏற்றுமதி 20 சதவீதம் முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு போட்டியாக உள்ள பல நாடுகள், டெக்ஸ்டைல் மூலதன பொருட்களை இறக்குமதி செய்ய சீனாவை மட்டுமே சார்ந்துள்ளன. இதனால், இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். சீனாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தியா நிரப்பும். இதற்கேற்ப அரசும் வரி சலுகைகளை வழங்க வேண்டும் என்றார்.

ஜவுளி ஏற்றுமதியில், மாநில அரசிற்கு செலுத்திய வரியை திரும்ப பெறும் சலுகை, ஏற்றுமதியை கூட்டுவதற்கு அளிக்கப்படும் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதியோடு ரத்து செய்து விட்டது. இதில் மாநில அரசுக்கு செலுத்திய வரியை திரும்ப பெறும் சலுகை திட்டத்தில் நிலுவை தொகை வர வேண்டியுள்ளது இதையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

* விலையை குறைத்தால் நஷ்டம்
பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் ஜவுளி உற்பத்திக்கான செலவு, 10 முதல் 15 சதவீதம் அதிகம். ஜவுளி ஏற்றுமதிக்கு போட்டியாக உள்ள பெரும்பாலான நாடுகள், ஜவுளி உற்பத்திக்கு தேவையான மூலதன பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியுள்ளன. இந்தியாவிலும் துணி வகைகளில் 10 சதவீதம், பட்டன், ஜிப், ஊசி போன்ற பிற பொருட்கள் இறக்குமதியில் 20 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலை இந்தியாவுக்கு சாதகமாக இருந்தாலும், ஏற்றுமதி வாய்ப்பை கருத்தில் கொண்டு விலையை குறைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் உள்ளது. ஏனெனில் விலையை குறைத்தால் நஷ்டம் ஏற்படும் என ஜவுளித்துறையை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். இதை ஈடுசெய்ய வரிச்சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *