இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு வெளிநாடுகள் தலையிட முடியாது

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள கோரிக்கைக்கு இலங்கை அரசு ஒருபோதும் அடிபணியாது.”

– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திலுள்ள பெரும்பாலான பரிந்துரைகள் இன மோதலுக்கு வழிவகுக்கக்கூடியதாக இருக்கின்றன. எனவே, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று பிற்பகல் நாடு திரும்பியுள்ளார்.

அவர் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இலங்கை நிலைவரம் தொடர்பில் முக்கிய பேச்சு நடத்தியிருந்தார். இதன்போது, ‘இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் பேசப்படவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி – சமத்துவம் – சமாதானம் வழங்கப்பட வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடு. இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று நாம் நம்புகின்றோம்’ என்று மஹிந்தவிடம் மோடி தெரிவித்திருந்தார்.

இந்தியப் பிரதமரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று மாலை கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ச அரசு முடிவுக்கொண்டு வந்த பின்னர் இங்குள்ள தமிழ், முஸ்லிம், சிங்களம் என சகல இனத்தவர்களும் நீதியுடனும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும்தான் வாழ்கின்றார்கள். இதை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைவிடுத்து இலங்கை விவகாரத்தில் வெளிநாடுகள் அநாவசியமாகத் தலையிட்டு இங்கு மீண்டும் இனமோதலை ஏற்படுத்த வழிவகுக்கக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *