நீதி – சமத்துவம் – சமாதானம் தமிழருக்கு வழங்க வேண்டும்! – மஹிந்த முன் மோடி இடித்துரைப்பு

“இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் பேசப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி – சமத்துவம் – சமாதானம் வழங்கப்பட வேண்டும். இதுவே இந்தியாவின் நிலைப்பாடு. இதைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று நாம் நம்புகின்றோம்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு புதுடில்லியில் ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை கைலாகு கொடுத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை மஹிந்த சந்தித்துப் பேசினார். இதில் இருநாட்டு வெளியுறவுத்துறை விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

அதன்பின்னர் புதுடில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடியை மஹிந்த சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை இதன்போது மோடி எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதன்போது இந்தியப் பிரதமர் மோடி கூறியதாவது:-

“இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, இரு நாட்டின் கூட்டு பொருளாதாரத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் பேசப்பட்டது.

மக்கள் தொடர்பை அதிகரிக்கவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நாங்கள் பேச்சு நடத்தினோம். தீவிரவாதம் இந்தப் பிராந்தியத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்தத் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து நாம் பேச்சு நடத்தினோம்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை திறந்த மனதுடன் பேசப்பட வேண்டும் என்பதை இலங்கைப் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி – சமத்துவம் – சமாதானம் வழங்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

இதைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று நாம் நம்புகின்றோம்.

இரு நாட்டு மீனவர் பிரச்சினையில் மனிதநேய அடிப்படையில் செயற்படுவது என்று இந்தப் பேச்சின்போது இணக்கம் காணப்பட்டது” – என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைப் பிரதமர் மஹிந்த, “அயல்நாடான இலங்கைக்கு இந்தியப் பிரதமர் வழங்கும் முக்கியத்துவத்துக்கு பாராட்டையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *