உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து பிற நாடுகளுக்கு வேகமாக பரவுகிறது

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 86 பேர் பலியாயினர். இதன் மூலம், அந்நாட்டு அரசின் தகவலின்படி பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூரில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை உரிய தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கப்படாததால், வுகானில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பலியாவது தினசரி நிகழ்வாகி உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 86 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். வுகானில் மட்டும் 81 பேரும், ஹெய்லாங்ஜியாங்கில் 2 பேரும், பீஜிங், ஹினான், கான்சு நகரங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.

இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,546 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 4,214 பேருக்கு வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. 1,280 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சீனா தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சீன அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 3.45 லட்சம் பேருக்கு நோய்க்கான அறிகுறி இருப்பதாகவும், 1.89 லட்சம் பேர் மருத்துவ பரிசோதனையில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. சீனாவைத் தவிர பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் 26 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே ஒருவர் பலியாகியும் உள்ளார்.

ஏற்கனவே பல்வேறு போராட்டங்களால் அந்நாட்டின் பொருளாதாரம் நிலையில்லாமல் இருக்கும் சூழலில், தற்போது விமான நிறுவனங்கள் சேவையை நிறுத்தி உள்ளன. வைரஸ் பரவுவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்கள் வீடுகளில் தேக்கி வைக்கின்றனர். மாஸ்க், டாய்லெட் பேப்பர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே போல, ஜப்பானில் 89 பேருக்கும், சிங்கப்பூரில் 33 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. சிங்கப்பூரிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு வீடுகளில் முடங்குவதால், பல கடைகள் பொருட்களின்றி காலியாக கிடக்கின்றன.

இந்தியாவில் கேரளாவில் வைரஸ் தொற்று தாக்கி 3 பேருக்கு தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், வுகானில் இருந்து திரும்பிய 647 இந்தியர்கள் மனேசர் மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவை தவிர பல உலக நாடுகளில்  கொரோனா வைரசால் பல நாடுகளில் மக்கள் மாஸ்க் அணிந்தபடியே வெளியில் நடமாடுகின்றனர்.

அமெரிக்கர் பலி
வுகான் நகரில் தங்கியிருந்த 60 வயது அமெரிக்கர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி நேற்று பலியாகி உள்ளார். இதனை சீன அரசு உறுதி செய்துள்ளது. இதுவரை சீனாவில் 34,546 பேருக்கும், ஹாங்காங்கில் 25, மக்காவில் 10 பேர் வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

குண்டுகட்டாக தூக்கி செல்லும் போலீசார்
வுகானில் நோய் தொற்று பரவுவதை தடுக்க சீன அரசு சில அதிரடியான ஆக்ரோஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொது இடங்களில் கண்காணிப்பதோடு மட்டுமின்றி வீடு வீடாகவும் மருத்துவ குழுவினர் சென்று மக்களின் உடல் நிலையை பரிசோதிக்கின்றனர். இதில் வைரஸ் அறிகுறியுடன் வீடுகளில் முடக்கிக் கிடப்பவர்களை குண்டு கட்டாக தூக்கி செல்கின்றனர். பல வீடுகளில் காய்ச்சலுடன் மருத்துமவனைக்கு வர மறுப்பவர்களை போலீசார் தரதரவென இழுத்துச் செல்லும் சில வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அவர்கள் தனிவார்டில் 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். பொதுமக்கள் அவர்களாக மருத்துமவனைக்கு வராவிட்டால் போலீசாரால் இழுத்து வரப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. ஆப்பிள் நிறுவனமும் காலவரையின்றி தனது கிளைகளை மூடுவதாக தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 5 வாரங்களாக சரிவை சந்தித்த கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 55 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி கொரோனா குறித்து சீன அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்ட பிறகு இதுவரை கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 13 டாலர் வரை விலை குறைந்துள்ளது. இது இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பொருளாதார மந்தநிலை நிலவும் நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படவில்லை.

கேரளா 15 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
கேரளாவில் சீனாவில் இருந்து திரும்பிய ஒரு மாணவி, 2 மாணவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த மாநில பேரிடர் அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை காசர்கோட்டில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உமிழ்நீர் மாதிரி ேசகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அதன் முடிவு வந்த பிறகே அந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும். இதற்கிடையே, விமானங்கள் ஏற்ற மறுத்ததால் சீனாவில் உள்ள கும்மிங் விமான நிலையத்தில் கடந்த சில தினங்களாக தவித்து வந்த கேரளாவை சேர்ந்த 15 மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் எர்ணாகுளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *