சீனாவில் 24000 பேருக்கு கொரோனா! உயிரிழப்புகள் அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில்

பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்கி சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. 24,324 பேருக்கு வைரஸ் தாக்கியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சார்ஸ் போன்ற ஆட்கொல்லியான இந்த வைரஸ் தாக்குதலுக்கு மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றனர். நேற்று மட்டும் வுகானில் 65 பேர் பலியாகி இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3,887 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 24,324 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், உண்மையான பலி எண்ணிக்கையையும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையையும் சீன அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மையான பலி எண்ணிக்கையும், பாதித்தவர்களின் எண்ணிக்கையும் பல ஆயிரத்தை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  கொரோனா வைரசுக்காக வுகானில் 10 நாளில் 1000 படுக்கை வசதி கொண்ட பிரமாண்ட மருத்துவமனையை சீன அரசு கட்டி முடித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தற்போது நோயாளிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.சீனா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. இதனால் சீனாவிலிருந்து வருபவர்களை உலக நாடுகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன.  சீனாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளதால் அங்கு கடுமையான  எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

நாட்டின் எல்லையை மூட வேண்டுமென அங்கு மருத்துவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் இருந்து வரும் அனைவரையுமே மருத்துவ பரிசோதனை இல்லாமல் நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டு அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சீனாவுக்கான ஹாங்காங் விமானங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதல், சீனாவுக்கு வர்த்தக ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. உலக நாடுகள் எதுவும்.,  அந்நாட்டிடம் இருந்து வாங்கும் பொருட்களை நிறுத்தி விட்டன.

இந்நிலையில், இந்நோய்க்கான தடுப்பு மருந்ைத கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த இக்கட்டான சமயத்தில் சீன அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். ஆனால், எந்த மாதிரியான உதவிகள் அமெரிக்கா செய்யும் என்பதை அவர் விளக்கவில்லை.

நாடுகள், பாதித்தவர்கள் விவரம்
பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை (உறுதியானவை) வருமாறு:
ஹாங்காங் – 17, மக்காவ் – 10, ஜப்பான் – 34, தாய்லாந்து – 25, சிங்கப்பூர் -24, தென்கொரியா -19, ஆஸ்திரேலியா -14, ஜெர்மனி – 12, அமெரிக்கா -11, தைவான் -11, மலேசியா -10, வியட்நாம் – 10, பிரான்ஸ் -6, யுஏஇ – 5,  கனடா-4, இந்தியா-3, பிலிப்பைன்ஸ் – 3, ரஷ்யா – 2, இத்தாலி – 2, இங்கிலாந்து – 2, பெல்ஜியம் – 1, நேபாளம் – 1, இலங்கை – 1, ஸ்வீடன் – 1, ஸ்பெயின் – 1, கம்போடியா – 1, பின்லாந்து – 1

ஜப்பான் கப்பலில் வந்த 10 பேருக்கு கொரோனா
ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த சுற்றுலா கப்பலில் பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை மாலை வந்த மற்றொரு கப்பல்  துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. கப்பலில் இருந்த 3,711 பேருக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

28 நாள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது
கேரளாவில்  கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்  2,321 பேர் வீடுகளில் இருந்து 28 நாட்கள் வெளியேற அரசு தடை விதித்துள்ளது. கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்ட 3 மாணவர்களின்  உடல்நிலை திருப்திகரமாக உள்ளது. இதற்கிடையே, கடங்கோடு  பகுதியை ஒரு வாலிபருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடக்க இருந்தது. மணமகன் 2 வாரம் முன்புதான் சீனாவில் இருந்து வந்தவர் என்பதால்,  அதிகாரிகள் உத்தரவுப்படி திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

சீனாவை விட்டு வெளியேறுங்கள் இங்கிலாந்து, பிரான்ஸ்  உத்தரவு
சீனாவின் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. இந்நிலையில், சீனாவில் இருக்கும் இங்கிலாந்து மக்களை உடனடியாக வெளியேறும்படி  இந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சீன அரசின் கட்டுப்பாடுகளால் வரும் வாரங்களில் அங்கிருந்து வெளியேறுவது  மிகவும் கடினமானதாகி விடும். நீங்கள் சீனாவில் இருந்தால், உங்களால் அங்கிருந்து வெளியேற முடியும் என்றால் வெளியேறி விடுங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல், ‘அதிமுக்கியமற்ற பயணங்களுக்காக சீனா செல்வதை தவிருங்கள். ஏற்கனவே அங்கிருப்பவர்கள் நாடு திரும்புங்கள்,’ என பிரான்சும் எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் வுகானில்  இருந்து  பெல்ஜியம் திரும்பிய 9 பேரில் ஒருவருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஜெர்மனியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ்  தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குழந்தை ஒன்றுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *