முன்னாள் போராளியான குடும்பஸ்தர் இடியன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! – மாங்குளத்தில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பிரதேசத்துக்குட்பட்ட பாலைப்பாணிப் பகுதியில் முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரஜி என்றழைக்கப்படும் ஜெயா (வயது – 46) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

குறித்த நபர் அந்தப் பகுதியில் சிலருடன் முரண்பட்டிருந்தார் எனவும், எனவே தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் தயாரிப்பான இடியன் துப்பாக்கி மூலம் இவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார் எனவும் மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்ட்னர்.

கொலையானவரின் தலைப் பகுதியில் மட்டும் காயம் காணப்படுகின்றது எனவும், அவரின் மனைவி கிளிநொச்சியில் பிரபல கல்லூரி ஒன்றில் பணியாளராகக் கடமையாற்றுகின்றார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொலையானவர் கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் வசித்து வருபவர் எனவும், வயல் அருவி வெட்டும் இயந்திரம் வைத்திருப்பவர் எனவும், அருவி வெட்டும் வேலைக்காகவே பாலைப்பாணியில் தங்கியிருந்தார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *