காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விமலும் பொறுப்பே! – நாடாளுமன்றில் வைத்து சரவணபவன் பதிலடி

“காணாமல் ஆக்கப்பட்டோரை மண்ணுக்குள்தான் தேடவேண்டும் எனத் திமிர்த்தனமாகச் சொன்ன விமல் வீரவன்ச, அப்படிக் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு புதைக்கப்பட்டனர் என்பதையும், யாரால் புதைக்கப்பட்டனர் என்பதையும் நன்கு அறிந்திருப்பார். எனவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ராஜபக்சக்கள் மட்டுமல்ல,விமல் வீரவன்சவும் பொறுப்புக்கூற வேண்டும்.”

– இவ்வாறு சபையில் நேற்றுப் புதன்கிழமை வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடித் தரும்படி கோரி நடத்தும் போராட்டம் ஆயிரம் நாட்களைத் தாண்டி மேலும் மாதங்களால் விரிவடைந்து செல்லும் இக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் என எவரும் இல்லை எனவும், அப்படி யாராவது காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களாக இருக்கக்கூடும் எனவும், அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் ஜனாதிபதியால் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

அதையடுத்து சில நாட்களில் அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் காணாமல்போனோர் என எவரும் இல்லை எனவும், காணாமல்போனோர் தொடர்பாகப் பொறுப்புக்கூற வேண்டிய தேவை ராஜபக்சக்களுக்கு இல்லை எனவும், தேவையானால் காணாமல்போனோரை மண்ணுக்குள் போய் தேடும்படியும் திமிர்த்தனமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

காணாமல்போனோர் இறந்துவிட்டார்கள் எனவும், மண்ணுக்குள்தான் அவர்களைத் தேட வேண்டும் எனவும் திட்டவட்டமாக விமலா வீரவன்ச கூறும் நிலையில் காணாமல்போனவர்கள் கொல்லப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுவிட்டனர் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது.

எனவே, காணாமல்போனவர்களைக் கொலைசெய்து புதைத்தவர்கள் யார் என்பது நிச்சயமாக விமல் வீரவன்சவுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது கொன்று புதைத்தவர்களில் அவரும் ஒருவராக இருக்க வேண்டும். எனவே, காணாமல்போனோர் தொடர்பாக பதில் சொல்ல வேண்டியவர்கள் ராஜபக்சக்கள் மட்டுமல்ல விமல் வீரவன்சவும்கூடத்தான் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது காணாமல்போனோர் தொடர்பாகக் கருத்துவெளியிடும்போது, காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு எனவும், அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் எதிர்பார்க்கின்றன எனத் தெரிவித்திருந்தார். அவர் அண்மையில் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் அலுவலக அதிகாரிகளுடன சந்திப்பை நடத்திய பின்பே இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதியாலும் அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்சவாலும் வெளியிடப்பட்ட கருத்துகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியால் வழங்கப்பட்ட பதிலடியே இது எனக் கருத வேண்டியுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதியின் கருத்துக்கு சர்வதேச மட்டத்தில் வலிமையான மறைமுக கண்டனம் முன்வைக்கப்பட்டபோதிலும் அமைச்சர் வீரவன்ச காணாமல்போனோரை மண்ணுக்குள் தேடும்படி கூறிய விடயம் முழு சர்வதேசத்தையும் உதாசீனம் செய்வதும் மனிதகுல மனச்சாட்சியைக் குழிதோண்டி புதைப்பதுமான ஈனமான செயல் என்றே நாம் கருதுகின்றோம்.

இவை வெறும் கிணற்றுத்தவளையின் கூச்சலாக இருந்த போதிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இதயங்களைக் கீறிக்கிழிக்கும் கொடூரமான செயல் என்றே அடித்துக் கூறுகின்றோம். அமைச்சர் விமல் வீரவன்ச எந்த நாட்டின் தீவிர பற்றாளர் எனக் கூறுகின்றாரோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாகச் செயற்படும் போலித் தேசியவாதி என்பதை பலமுறை நிரூபித்துள்ளார்.

அண்மையில் மன்னாரில் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தமைக்காக அதைத் திரை நீக்கம் செய்ய மறுத்து பின்பு சிங்களத்தில் முதலிடம் கொடுத்து எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அந்த இடத்தில் நிறுவி அதைத் திறந்து வைத்தார். இலங்கை அரசமைப்பின்படி இலங்கையில் சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகள் என்பதும் வடக்கு, கிழக்கில் தமிழ் நிர்வாக மொழி என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் ஆகும். எனவே, வடக்கில் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் கொடுத்தமைக்காக பெயர்ப்பலகையை நீக்குவது அப்பட்டமாக அரசமைப்பை அவமதிக்கும் செயலாகும்.

விமல் வீரவன்ச ஏற்கனவே போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை மறந்துவிட முடியாது.

இந்தப் போலித்தேசியவாதி இலங்கையின் சட்ட திட்டங்களைப் பகிரங்கமாகவே இரு முறை மீறியுள்ளார்.

இவ்வாறு தனது தாய்நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காத இவர் தமிழ் மக்களுக்கு விரோதமான இனவெறி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தன்னை சிங்கள மக்களின் வீரநாயகனாகக் காட்ட முயன்று வருகின்றார்.

ஆனால், காணாமல்போனோர் விவகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு உட்பட்டது என்பதும், அதற்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கியுள்ளது என்பதும் முக்கியமான விடயங்களாகும். அதை மறுதலிப்பதென்பது சர்வதேசத்துக்குச் சவால்விடும் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகும். அதிகாரபீடங்களுக்கு அடிவருடுவதன் மூலம் உள்ளூர் சட்டதிட்டங்களை மீறிவிட்டு தப்பிவிடலாம். ஆனால், சர்வதேச மட்டத்தில் என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

காணாமல்போன தனது பிள்ளைகளுக்காக ஏங்கும் தாயின் வேதனையை – காணாமல்போன தனது மகனுக்காகத் துடிக்கும் தந்தையின் ஏக்கத்தை – காணாமல்போன தனது கணவனுக்காக வாழ்வையே இழந்து தவிக்கும் மனைவியின் துயரத்தை உணர முடியாதவர்கள் அரசியல் அதிகாரத்தில் வீற்றிருக்கும் வரை நீதியைத் தேடுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஆனால், இவர்களினதும், இவர்களை வழிநடத்தும் மத வெறியர்களினதும், இவர்களின் அடிவருடும் இனவெறியர்களினதும் வீரநாயக வேடம் அம்பலப்படும்போது இவர்கள் சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவார்கள்.

‘ஏழை அழுத கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்’ எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடிக்கும் கண்ணீர் ஒரு நாள் வாளாக மாறும்போது இவர்கள் அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *