சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை! – தமிழர்களைப் புறக்கணிப்பதால் இந்த முடிவு என்கிறார் சம்பந்தன்

“இலங்கையின் 72ஆவது சுதந்திர தின விழாவில் பிரதான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை. தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அவர்களின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது. இதன் காரணமாக இன்றைய தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று மாலை முக்கிய கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே, தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது என இரா.சம்பந்தன் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.

2015ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இம்முறை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று கோட்டாபய அரசு கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. அதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலேயே கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு செயற்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தன்னைத் தோற்கடித்த தமிழ் மக்களைப் பழிவாங்கும் வகையிலேயே அவர் செயற்படுகின்றார். முழு நாட்டுக்கும் ஜனாதிபதியாகச் செயற்படுவேன் என்று கோட்டாபய கூறினாலும், அவர் தமிழர்களை, தனக்கு வாக்களிக்காத தமிழ் பேசும் மக்களைப் புறக்கணித்தே செயற்பட்டு வருகின்றார்.

இந்தக் காரணங்களால், இன்றைய சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்துள்ளோம்” – என்றார்.

இதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *