உலக அதிசயப் பட்டியலில் தஞ்சை கோவில் சேர்க்கப்படுமா

உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரிய கோயிலை சேர்க்க வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், குடமுழுக்கு விழா உயர்மட்டக் குழு உறுப்பினருமான டி.கங்கப்பா தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கோயிலுக்கு வந்த டி.கங்கப்பா(81), வாராகி அம்மன், ராஜராஜ சோழனால் அமைக்கப் பட்ட நந்தி சிலை, கருவூர்த் தேவர் சந்நிதிக்குச் சென்று சென்று வழிபட்டார். தொடர்ந்து, கோயில் அலுவலகத்துக்குச் சென்று விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

நான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக கடந்த 1979-ம் ஆண்டு பொறுப்பேற்று ஓராண்டு காலம்தான் பணியாற்றினேன். 12.7.1979 அன்று என்னுடைய பிறந்தநாள். அன்று முதன்முறையாக எனது குடும்பத்தினருடன் இந்தக் கோயிலுக்கு வந்தேன். அப்போது விளக்குகள் இல்லை, பூஜை செய்ய போதிய அர்ச்சகர்கள் இல்லை. கோயிலைப் பார்த்து வியந்து போனேன். பின்னர் இக் கோயிலுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தேன்.

இதையடுத்து, 1980-ம் ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவை சிறப்பாக நடத்தினேன். இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெரிய கோயில் குட முழுக்கு விழா சிறப்பாக நடத்தப் பட்டது. அந்த விழாவில் எந்த குறைகளும் கிடையாது. அந்த அளவுக்குத் திட்டமிட்டு பணியாற்றினேன். அந்த விழாவின்போது பல லட்சம் பேர் கோயிலுக்கு வந்து சென்றனர்.

மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்திலும் சரி, மராட்டியர்கள் காலத்திலும் சரி, நான் ஆட்சியராக இருந்தபோதும் ஏப்ரல் மாதத்தில்தான் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

1980-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவின்போது 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரத்தில் ஏறியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாகும். இது நான் கலந்துகொள்ளும் இந்தக் கோயிலின் 3-வது குடமுழுக்கு விழாவாகும்.

இந்தக் குடமுழுக்கு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஆனால், தொல்லியல் துறை கொஞ்சம் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, விழாவுக்கு இன்னும் மெருகூட்டியிருக்கலாம்.

குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்கள் அதிக அளவு வரும் நிலையில் வாராகி அம்மன் சந்நிதியில் அர்ச்சகர்கள் யாரும் இல்லை. அதேபோல, மாமன்னன் ராஜராஜ சோழனால் நிறுவப்பட்ட ஒரே கல்லால் ஆன நந்தி சிலையை எவ்வித பராமரிப்பும் இல்லாமல் வைத்திருப்பது சற்று வேதனையாக உள்ளது. அந்தச் சிலையைக் கொஞ்சம் புதுப்பித்திருக்கலாம்.

இக்கோயில், தாஜ்மகாலைவிட அற்புதமானது, தனிச் சிறப்புப் பெற்றது. எனவே, இக்கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெற ஆவண செய்ய வேண்டும். நான் பணியாற்றிய போது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது. அப்போது, திருவாரூருக்குச் சென்றேன். அங்குள்ள மனுநீதி சோழனின் சிலையையும், அவரது நிர்வாகத் திறனையும் கேள்விப்பட்டு அதிசயித்துப் போனேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *