கூடுவிட்டுக் கூடுப்பாயும் யானை கூட்டம்

கூடுவிட்டுக் கூடுபாயும் யானைக் கூட்டம்!

இலங்கை அரசியலில், ‘தோல்விகளின் தொடர் நாயகன்’ என்று கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முகங்கொடுத்த உட்கட்சி அழுத்தங்கள், அவமானங்கள், நிராகரிப்புகள் என்று எல்லாவற்றில் இருந்தும் மீண்டெழுந்து, கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளார்.

அசுர வெற்றியைப் பெற்றுக்கொண்ட ராஜபக்‌ஷக்களுக்கு முன்னால், துரும்பாகிவிட்ட சஜித் தரப்பின் அரசியல், “இனி என்ன”, என்ற மிகப்பெரிய கேள்வி, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியிலும் சரி, இலங்கை அரசியலிலும் சரி வியாபித்து நிற்கின்றது.

இவ்வேளையில், கட்சியின் செயற்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், தனது அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார் ரணில்.

ஐக்கிய தேசியக் கட்சியானது, ரணிலை வைத்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாது என்று, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ஓங்கிக்குரல் கொடுத்தவர்களே, கட்சியை மீண்டும் ரணில் எடுத்துக்கொண்டால்தான் சரி என்று கூறவைத்திருக்கிறார் ரணில்.

இந்தவகையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் முகாமுக்குள் பாய்ந்திருந்து, ரணிலுக்கு ‘கிளைமோர்’ அடித்துக்கொண்டிருந்த மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம போன்றவர்கள்கூட, மீண்டும் ரணில் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள். இது மிகப்பெரியதொரு மாற்றம்தான்.

இன்றைய நிலையில், இலங்கையில் பலமானதோர் எதிர்த்தரப்பாகத் தம்மை நிலைநிறுத்துவது என்பது, எந்தக்கூட்டணிக்கும் மிகப்பெரியதொரு சவாலாகும். இது அனைவரும் அறிந்த உண்மை.

ராஜபக்‌ஷக்களின் அசுர சக்திக்கு முன்னால், இலங்கை அரசியல் ‘பம்மி’க்கொண்டிருக்கிறது.
கோட்டாபயவை ஆட்சிக்குக்கொண்டு வந்த பெரும்பான்மைச் சிங்கள மக்கள், இனித் தமக்கு அவரது ஆட்சிதான் பலம் சேர்க்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். நல்லதோ கெட்டதோ, அது ராஜபக்‌ஷக்களின் ஊடாகத்தான் நடைபெறும் என்ற உறுதிப்பாடு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆட்சிக்கான எதிர்த்தரப்பாக அமர்வதென்பதும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதென்பதும் அதற்குப்பிறகு ஏற்படப்போகும் விளைவுகளுக்கு முகங்கொடுப்பதென்பதும் மிகப்பெரிய சவால் நிறைந்தவை.

ராஜபக்‌ஷக்களுடன் முற்றுமுழுதாக எதிரியாகி விடாமலும் அதேவேளை, எதிரியாகவும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அரசியல் ஞானமும் இராஜதந்திர நெளிவுசுளிவும் இதற்குத் தேவை.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் அரசியல் ஆளுமையைப் பெரும்பான்மை, சிறுபான்மை மக்கள் அனைவரும் நன்றாகவே கண்டுகொண்டுவிட்டார்கள். அவரது நியமனம் என்பது தேர்தலின்போது, நிச்சயம் புதிய முகம் ஒன்று வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் எற்படுத்தப்பட்டதாகவே கருதவேண்டும். அவரது தந்தை வழியிலான அரசியல் பாரம்பரியமும், இன்னொரு தலைமுறைக்கான அரசியல் தெரிவு என்பதும்தான் சஜித் விடயத்தில் சாதகமாகக் காணப்படும் அம்சங்களாகும்.

ஆனால், இன்று சஜித் போன்ற நபரை முன்னிறுத்திக்கொண்டு எதிர்க்கட்சியொன்று அரசியல் செய்யவே முடியாது என்பதை, ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள பலரும் புரிந்துவருவதுபோல்த்தான் நிலைமை காணப்படுகின்றது.

முக்கியமாக, ஆட்சிக்கு வந்த ராஜபக்‌ஷக்கள், அரசியலுக்கு அப்பால் உடனடியாகச் செய்யத் தொடங்கிய காரியங்களை எடுத்துநோக்கினால் இது புரியும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், தமக்கு எதிராகக் கடுமையாகக் குரல்கொடுத்து வந்தவர்கள் ஒவ்வொருத்தரையும் பொலிஸ் தூக்கிச்சென்றிருக்கிறது. சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரட்ன, ரஞ்சன் ராமநாயக்க என்ற பெயர்போன அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி, திணைக்களங்கள், நிர்வாகத் தரப்புகளில் உயர்பதவி வகித்தவர்களுக்கும் ‘வெள்ளை காற்சட்டை போட்டு அழகு பார்க்கவேண்டும்’ என்று ராஜபக்‌ஷ தரப்பு பெரும் நடவடிக்கையொன்றில் மறைமுகமாக இறங்கியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னர், தமது சுயரூபத்தை காண்பித்துவிடக்கூடாது என்பதில் ராஜபக்‌ஷ தரப்பு எவ்வளவுதான் கவனமாகச் செயற்பட்டுக்கொண்டாலும், தங்களை எதிர்த்தவர்களை உடனடியாகத் தூக்கிச்சென்று, சிறையில் போடுவதற்கும் இதன் மூலம் எதிர்க்கட்சிகளில் உள்ள ஏனையவர்களுக்கு ஒரு மிரட்டல் செய்தியைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கான இந்த மிரட்டல் செய்தி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்குச் சார்பாக வேலைசெய்யும் என்று அவர்களுக்குத் தெரியும்.

இந்த விடயத்தைத் தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெற்றுவரும் ரணில் ஆதரவு அலையோடு, மெல்லிதாக ஒப்பிட்டுப்பார்த்தால், ஓர் உண்மை புலப்படும்.

அதாவது, ரணில் என்பவர் என்னதான் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்தாலும், அவர் என்றைக்கும் ராஜபக்‌ஷக்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகின்றவர் என்ற மறைமுக உண்மை விடயமறிந்த வட்டாரங்களுக்குத் தெரியும்.

கடந்த ஆட்சிக்காலத்தில், ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இறுக்கப்பட்டபோதும் சரி, சட்டம் மிகத்தீவிரமாகத் தனது கடமையைச் செய்ய முற்பட்டபோதும்சரி, அது ராஜபக்‌ஷக்களை மிகப்பெரியளவில் ஆபத்தில் மாட்டிவிடாமல் பார்த்துக்கொண்டவர் ரணில்.

மஹிந்தவின் மனைவி ஷிராந்தியைக் கைதுசெய்வதற்கான சகல சட்ட சாத்தியங்களும் முனைப்படைந்து, கைகளில் விழுவதற்கு விலங்கு தயாராகியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்தக் கைதைத் தடுத்து நிறுத்தியவர் ரணில் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம்.
இது மாத்திரமல்லாமல், மஹிந்தவின் மகன்களின் திருமண வைபவங்களுக்குச் சென்று, ராஜபக்‌ஷ குடும்பத்துடன் கூடிக்குலாவியதும் சரி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, கட்சிக்குள் தனது முக்கியத்துவம் வீழ்ச்சியடைந்தபோது, வெளிப்படையாகவே மஹிந்த தரப்புடன் நட்புப் பாராட்டிக்கொண்டதும் சரி, ரணில் என்பவர் எப்போதும் மஹிந்த முகாமின் ஒருவராக, எதிர்த்தரப்பிலிருந்து கொண்டிருக்கிறார். இது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.

ஆக, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் ராஜபக்‌ஷக்களின் ஆட்சி, எப்போது முடியப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. மேலே குறிப்பிட்டதைப்போல, முடிவுக்கு வரும் என்பதே சந்தேகம்தான்.

இந்தப்பின்னணியில், எதிர்த்தரப்பில் உள்ள அரசியல்வாதிகள் அரசியல் செய்வது என்பதற்கு அப்பால், ராஜபக்‌ஷக்களின் சட்ட அம்புகளுக்குள் அகப்படாமல், சிறைசெல்லாமல் இருப்பதற்கு, ரணிலின் ஆசீர்வாதம் இன்றியமையாதது.

தற்திறமையோடு வியாபித்து நிற்கும் தலைவர்களைவிட, தங்களது ஆளுமையில் மாத்திரம் பெருநம்பிக்கை கொண்டுள்ள தலைவர்களைவிட, எதிர்தரப்புகள், தாம் சார்ந்த துறைகள் அனைத்துடனும் மறைமுக ‘டீல்கள்’ வைத்திருபவர்களே இன்றைய அரசியலில் பலம் மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஊரெல்லாம் ‘உள்ளடி’ வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, ஒருத்தர் மாத்திரம் நேர்மையான அரசியல் செய்யப்போகிறேன் என்று எழுந்து நிற்பது எந்தவகையிலும் பயன்தராது. அப்படிப்பட்டவர்கள், அரசியலில் தத்துவம் பேசலாமே தவிர, அவர்களுக்கு வெற்றி சாத்தியமாகாது.

இதை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ரணிலுக்கான விசுவாசமும் அவர் பொருட்டு எல்லோருக்கும் கிடைக்கவேண்டிய ஆதரவும் எவ்வளவு பெறுமதியானது என்பதை, அவர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.

மறுபுறத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் எதிர்கொண்ட அரசியல் அழுத்தங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சியை இனியொருவர் பொறுப்பேற்று, அதை வெற்றிப்பாதையில் கொண்டுநடத்துவது என்பது, எவ்வளவு கடினமும் அர்ப்பணிப்பும் மிக்க பணி என்பது ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் புரிந்திருக்கிறது.

ராஜபக்‌ஷக்கள் தற்போதைய நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்காக, அசுர வேகத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைச் சாதித்துவிடுவதற்கு அவர்கள் போடுகின்ற கணக்குகளும் வியூகங்களும் கூர்மையானவை.

தாங்கள் வெற்றிபெறுவதற்கு அப்பால், எதிர்த்தரப்பிலிருந்தும் ஆள்களைத் தூக்குவதற்குத் திட்டங்களைப் போடுவார்கள். இந்த வலையில் யார் யார் சிக்கி, அந்தப் பக்கம் போய் விழுவார்கள் என்பதெல்லாம் யாராலும் இப்போதைக்குக் கணிக்கமுடியாது.

ஏற்கெனவே, அரசியல் அதிருப்திகளால் கட்சிக்குள் பல முக்கியஸ்தர்கள் பின்வரிசை உறுப்பினர்கள் ஆகியுள்ள நிலையில், அடுத்த தேர்தலுடன் ‘மொட்டு’வின் பக்கம் எத்தனை பேரும் தாவலாம்.

இந்தமாதிரியானதொரு நிலை நீடிக்கும்போது, கட்சிக்குள்ளிருந்து பெரும் புரட்சிகளைச் செய்து, கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு நடத்துவதற்கு அங்கு யாருமே தயாரில்லை என்பது யதார்த்தம்.

கட்சிக்காக மிக வலுவாகப் பேசியவர்களுக்கும் வயது வந்துவிட்டது. இளையவர்கள் என்று அங்கிருப்பவர்களும் இப்போது மிகக்குறைவு. அவர்கள் அரசியல் பழகி, ராஜபகஷக்களை எதிர்ப்பது என்பதெல்லாம் பகல்கனவுதான்.

ஆக, இந்த விடயங்களைக் கூட்டிக்கழித்துப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியினர் எல்லோரும் சேர்ந்து, மறைமுகமாக ரணிலைத் தொடர்ந்தும் தோல்வியின் தொடர் நாயகனாகக் கொண்டுபோய் நிறுத்துவதற்குத்தான் பார்க்கிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியத்தில் அனைத்துத் தோல்விகளும் ரணில் தலைமையில் ஏற்பட்டது என்பதையும் அதற்கான சகல பொறுப்புகளையும் வரலாற்றில் அவர் மாத்திரமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றதொரு செய்தியையும் தற்போதைய ரணில் ஆதரவு அணி, கெட்டித்தனமாக ரணிலின் மீது சுமத்திக்கொள்கிறது.

பதவியின் பொருட்டு, தனக்கு அதிகாரம் வந்துகொண்டதாக என்னதான் ரணில் சிரித்துக்கொண்டாலும், கைவிட்டுப்போன கட்சிப்பொறுப்பு தனக்கு கிடைத்துவிட்டதாக ரணில் என்னதான் பெருமைப்பட்டுக்கொண்டாலும், தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்கள், ரணிலுக்கு வரலாற்றில் கொடுக்கப்போகும் பெயர் உவப்பானதாக இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், அதையும் மீறி அவரால் ஒரு பெரும் அரசியல் புரட்சியை செய்துகொள்ளமுடியுமானால், ராஜபஷக்களின் அதிகாரத்தைப் பிடுங்குமளவுக்கு ரணிலின் அரசியல் சாணக்கியம் அரங்கேறி வெற்றியடையுமாக இருந்தால், அது இலங்கை வரலாற்றில் ரணிலுக்கும் அதி மேதகு தளத்தை உருவாக்கிக்கொள்ளும். அதுவே ரணிலின் வாழ்நாள் இலட்சியத்தையும் நிறைவேற்றிவைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *