எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் 8 ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சி செய்ய உள்ளனர்

எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலின் பின்னர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நாட்டை ஆட்சிசெய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகவும், ராஜபக்சவினர் தமது குடும்ப ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக 19வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்து மீண்டும் 18 வது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை ராஜபக்ச சகோதரர்கள் கோரி வருவதாக UNPயின் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் S.M மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள குடியிருப்புத் தொகுதிக்கு இன்றைய தினம் சென்றிருந்த UNPயின் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அங்கு வாழும் அவரது ஆதரவாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள் அடங்கிய பொதியை பகிர்ந்தளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்:-
2015ம் ஆண்டிற்கு முன்னர் இருந்த குடும்ப ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சியின் முதற்படியாக ராஜபக்ச குடும்பத்திலுள்ள அனைவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
2015ம் ஆண்டில் நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக ஆட்சியை கைப்பற்றி January 29ம் திகதி எமது 1வது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து சமையல் எரிவாயு, எரிபொருட்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கான விசேட கொடுப்பனவு உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்தோம்.
அதனை பாரளுமன்றத்தில் 46 பாரளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே செய்தோம். அதேபோல் புதிய அரசாங்கத்திற்கும் தாமதமின்றி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு சமர்பித்தால் அதற்கு நாங்கள் ஆதரவாக வாக்களிக்கத் தயார். இருப்பினும் தமக்கு பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தால் நாட்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க முடியும் என்று கூறிக்கொண்டு ராஜபக்ச குடும்பத்தினர் புதிய பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பொருட்களின் விலைகளை குறைக்கவோ, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவோ, நாட்டை அபிவிருத்தி செய்யவோ இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரவில்லை. மாறாக 19வது திருத்தத்தை ரத்து செய்து, ராஜபக்சவினர் மீண்டும் இந்த நாட்டின் அரச குடும்பமாக தம்மை மாற்றிக் கொள்வதற்காக 18வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்காகவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரிவருகின்றனர்.
ஊடக சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை இல்லாதொழித்து மீண்டும் ராஜபக்ச குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதே அவர்களது திட்டம். அதனைவிடுத்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய அல்ல. இந்த இடைக்கால அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ச அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை. ஆனால் பொதுத் தேர்தலின் பின்னர் அவர் அமைச்சுப் பொறுப்பை ஏற்கமாட்டார் என்று நினைக்கிறீர்களா? ராஜபக்ச குடும்பத்தில் 8 பேர் அமைச்சரவையில் இருப்பார்கள்.
சகோதரன் ஜனாதிபதி, அண்ணா பிரதமர், பெரிய அண்ணன் சமல் ராஜபக்ச அமைச்சர், மொனராகலையில் சசீந்திர ராஜபக்ச, ஹம்பாந்தோட்டையிலிருந்து நாமல் ராஜபக்ச, களுத்துறையிலிருந்து ரோஹித்த ராஜபக்ச, ரத்தினபுரியிலிருந்து யோஷித்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச எந்த மாவட்டத்திலிருந்து என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது அரசாங்கத்திற்கு சார்பாக இயங்கும் ஊடகத்துக்கு என்றால் சிறந்ததாக காணப்பட்டாலும் நாட்டு மக்களுக்கு தீமையான விடயமாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *