சஜித்தின் புதிய கூட்டணிக்கு ரணில் தரப்பும் பச்சைக்கொடி! – நளின் பண்டார கூறுகின்றார்

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் இணைவதற்கு ரணில் தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது. கூட்டணி அமைப்பது வெற்றிபெற்றுள்ளது. புதிய வேலைத்திட்டம் அடுத்த வாரமளவில் மக்கள் மயப்படுத்தப்படும்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூடுவதற்கு முதல்நாள் ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாஸவும் நேரில் சந்தித்து செயற்குழுவில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

எனினும், மறுநாள் காலை சரத் பொன்சேகா, இம்தியாஸ், ரோஸி சேனாநாயக்க, அஜித் பி. பெரேரா ஆகியோர் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அறியக் கிடைத்தது. இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் நாம் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

எனினும், மலிக் சமரவிக்கிரம, மங்கள சமரவீர ஆகியோரை எமது பிரதிநிதிகளாக அனுப்பிவைத்தோம். சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு ரணில் தரப்பு இணக்கம் வெளியிட்டது.

அத்துடன், வேட்புமனுக் குழுவின் தலைமைப்பதவி, சஜித்தின் பரிந்துரையின் பிரகாரம் கூட்டணியின் பொதுச்செயலர் பதவிக்கு உறுப்பினர் தேர்வு என எமது முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சஜித் பிரேமதாஸ சுயாதீனமாகச் செயற்படுவதற்குரிய, துணிகரமாக முடிவெடுப்பதற்குரிய நிலை உருவாக வேண்டும் என்பதே எமது இலக்கு. அந்த இலக்கு தற்போது நிறைவேறியுள்ளது.

எனவே, அனைத்துத் தரப்புகளையும் இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்படும். அதன் வேலைத்திட்டம் அடுத்த வாரம் மக்கள் மயப்படுத்தப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய யாப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க தாமாக விரும்பி பதவி விலகினால் மட்டுமே புதியவரை தலைவர் பதவிக்கு நியமிக்கலாம். அதனைச் செய்வதற்கு அவர் தயாரில்லை. அத்துடன், கட்சி யாப்புடன் எம்மால் மோத முடியாது.

எனவேதான் சஜித் தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கினோம். அது தற்போது வெற்றிபெற்றுள்ளதால் பொதுத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *