ஐ.தே.கவின் ‘113 பிளஸ்’ சாத்தியமா?

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனியும் அரசியல் பயணம் கிடையாது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று அந்தக் கட்சியின் ரணில் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தார். எனினும், 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையே கைப்பற்றியது. தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருந்தார். அவ்வாறிருந்தும்கூட அவர்களால் 106 ஆசனங்களுக்குமேல் பெறமுடியவில்லை.

பிரதமர் பதவி கைவசம் இருக்கும்போதுதான் ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொண்டனர். அதிலும் தோல்வியடைந்தனர்.

ஆட்சிஅதிகாரம் கைவசம் இருக்கும்போதே தேர்தலில் வெற்றி பெற முடியாத ஐக்கிய தேசியக் கட்சி இனி என்ன செய்யப்போகின்றது?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். அவரின் வேலைத்திட்டத்துக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். 2019 நவம்பர் 16 ஆம் திகதி இருந்ததைவிடவும் தற்போது அவருடைய புகழ் மோலோங்கியுள்ளது. அவர் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

இனி ஐக்கிய தேசியக் கட்சியால் தேர்தலில் முறையாக முகங்கொடுக்க முடியாது. இந்தநிலையில், ஐ.தே.க. ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சி உறுப்பினர்கள் கூறுவது நகைப்புக்குரியது” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *