அரசமைப்பு முறைமையை மீறியேவிட்டார் கோட்டாபய! – மாவை எம்.பி. காட்டம்

“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சுதந்திர தின விழா, மற்றும் பொது நிகழ்ச்சிகளில், அரசமைப்பு விதிமுறையின்படி தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடப்பட்டு, இசைக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் இது மீறப்பட்டுள்ளது.”

– இவ்வாறு காட்டமாகத் தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா.

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் இந்தமுறை சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதைக் கண்டித்து மாவை சேனாதிராஜா எம்.பி. வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பிட்டுள்ளதாவது:-

“1949இல் சுதந்திர தினத்தில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழில் அப்போது நல்லதம்பி என்பவர் மொழிபெயர்த்திருந்தார். 1956இல் சிங்களம் மட்டும் சட்டம் வந்த பின்னும் 1987ஆம் ஆண்டு வரை இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

பின்னர் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தேசிய கீதம் தமிழிலும் பாடி இசைப்பதற்கு நடைமுறை வந்தது.

இந்தநிலையில், 2019ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றார். அவர் ஜனாதிபதியானதும், ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மைப்பலம் இருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து விலக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார். இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

பொது நிர்வாக அமைச்சும் அரசும் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடவும் இசைக்கவும் வேண்டும் என்று அறிவித்திருக்கின்றது. ஆனால், பல நாடுகளில் அந்த நாட்டுத் தேசிய கீதம் பல மொழிகளிலும் பாடப்படுகின்றன.

2015இன் பின் சுதந்திர தின விழாவிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் பாடசாலைகள், பொது நிகழ்ச்சிகளிலும் கூட தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவும் இசைக்கவும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அரசமைப்பு விதிமுறையின்படியே இந்த நிகழ்ச்சிகளில் இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், இந்த நல்லிணக்க நடவடிக்கை தற்போது மீறப்பட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி, அப்போது பிரதமராக இருந்த பண்டாரநாயக்க நாட்டின் அரச கரும மொழி சிங்களம் மட்டும் என்று நாடாளுமன்றில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். அதனை எதிர்த்தும், தமிழுக்கும் சம உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் தந்தை செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்றின் (பழைய நாடாளுமன்றம்) முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களும் உயர் தகை சான்றோரும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அந்தச் சத்தியாக்கிரகிகள் மீது சிங்களத் தீவிரவாதிகள் கருங்கற்களை வீசியும், மூங்கில் தடிகளால் தாக்குதல் நடத்தியும் கலவரத்தை உண்டாக்கினர். அதில் சத்தியாக்கிரகிகள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களில் வன்னியசிங்கம், அமிர்தலிங்கம், நாகநாதன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அமிர்தலிங்கத்தின் தலை பிளந்தது. காலிமுகத்திடல் குருதி சிந்திய களமாகியிருந்தது. அமிர்தலிங்கம் தலைக்குக் கட்டுப்போட்டும் குருதி சிந்தியபடி நாடாளுமன்றுக்குள் சென்றார்; அங்கு உரையாற்றினார்.

தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து உரையாற்றிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதை எதிர்த்தும் வாக்களித்தனர்.

சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர்.டி.சில்வா நாடாளுமன்றில் பேசும்போது, ஒரு மொழி (சிங்களம்) என்றால் இரண்டு நாடு; இரண்டு மொழிகள் (சிங்களமும் தமிழும்) என்றால் ஒரு நாடு என்று கூறினார். இன்றுவரை பெரும் இரத்தக்களரி ஏற்பட்டு, இலட்சக்கணக்கோரைப் பலிகொடுத்தும் இந்த நிலைமை மாறவில்லை.

தந்தை செல்வநாயகம் நாடாளுமன்றத்திலும் 1949 முதல் நடைபெற்ற மாநாடுகளிலும் “இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழருக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை; ஐரோப்பியரிடம் இழந்த சுதந்திரத்தை மீட்கப் போராட வேண்டும்” என்று கூறினார். பல போராட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெற்று வந்திருக்கின்றன.

1956இன் பின் இலங்கையில் தமிழ் மக்களின் மொழிப் போராட்டங்களின்போது இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரலாய் (முதல் ஜனாதிபதி) விளங்கிய இராஜ கோபாலாச்சாரியார் தனது ‘சுவராஜ்’ பத்திரிகையில் பிவருமாறு குறிப்பிட்டார்.

‘இலங்கையில் இரண்டு இணங்களுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளி அறிகுறியே மொழிப்பிரச்சினை. இது மொழிகளுக்கிடையிலோ, பண்பாடுகளுக்கிடையிலோ நடைபெறும் போராட்டமல்ல. இரண்டு சமூகங்களுக்கிடையில் நடைபெறும் போராட்டமாகும். தமிழ்பேசும் மக்கள் சமத்துவமாக நடத்தப்படப் போகின்றார்களா? இல்லையா? என்பதே கேள்வி’ – என்று எழுதினார்.

உலகின் பல நாடுகளில் அந்த நாடுகளின் மொழிகளில் தேசிய கீதங்கள் பாடப்படுகின்றன. அந்த நாடுகளின் மக்களின் மொழிகளில், இயற்கை அமைவுகளின், பிரதேசங்களின் அடையாளங்கள், பண்பாடுகள் பற்றி சுதந்திரத்தின் தாகம் பற்றிக் குறிப்பிடுகின்ற தேசிய கீதங்களைப் பார்க்கின்றோம்.

அண்மையில் அமைச்சர் ஒருவர் இந்தியாவில் ஒரு மொழியிலேதான் தேசிய கீதம் பாடப்படுகின்றது. இலங்கையில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு என்று அறிவற்றுப் பேசினார்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்று உருவாக்கிய அரசமைப்பு இன்று பூரணமான ஒரு கூட்டாட்சி. அதாவது ‘Federal Constitution’ என்ற கூட்டாட்சி அரசமைப்பைக் கொண்டுள்ள நாடே இந்தியா. பல பிராந்திய, பல மொழிகளில் மொழி மாநிலங்கள், பூரண அதிகார ஆட்சி முறைகளைக் கொண்டுள்ளன. மாநிலங்களுக்குள்ளும் சமூகங்கள் பிரதேசங்கள் மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்வதற்கும் இடமுண்டு. அவ்வாறு பகிரப்பட்டும் உள்ளன.

அற்புதமான இந்திய தேசிய கீதம் இதயங்களை எழுச்சி கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அந்த நாட்டின் தேசிய கீத இந்தி மொழியில் இல்லை. இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியிலே உருவாக்கிய தேசிய கீதம் வங்க மொழியில்தான் பாடப்படுகின்றது. இந்திய நாட்டின் இனங்கள், மொழிகள், மொழி பிராந்தியங்கள், மாநில அரசுகளின் பெயர்கள், நதிகளின் மலைகளின் பெயர்கள் தேசிய கீதத்திலே குறிப்பிடப்படுகின்றன. இவையெல்லாம் இலங்கை நாட்டின் பௌத்த, சிங்கள பெரும்பான்மைத்துவ அடிப்படைவாதிகளுக்குப் புலப்படாது” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *