சீனாவில் அனைத்து மாநிலங்களிலும் வைரஸ் பரவியதால் வெளியேறும் வெளிநாட்டவர்கள்

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக BBC இன்று செய்தி வௌியிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் இதுவரையில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் 7711 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவின் கேரள மாநிலத்திலும் பிலிப்பைன்ஸ், பின்லாந்து மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் கேரளாவை சேர்ந்த மாணவரே தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையொன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபெய் பிராந்தியத்தில் இருந்து அழைத்து வரப்படுபவர்களை இரண்டு வாரங்களுக்கு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்திருப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.

அவர்களை தீவில் தடுத்து வைத்திருப்பதற்காக 1000 டொலரை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 600 பேரளவில் தடுத்து வைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எனினும், சீனாவின் ஹூபெய் பிராந்தியத்திலுள்ள அவுஸ்திரேலியர்கள் அந்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாம் சிறைக்கைதிகள் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, சீனாவை தவிர ஏனைய நாடுகளில் வைரஸ் பரவும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பரவும் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

2002 – 2003 ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பை விட கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வைரஸ் பரவுகின்ற காரணத்தினால் கூகுள் உள்ளிட்ட சீனாவில் அமைந்துள்ள உலகின் பிரபல நிறுவனங்கள் தமது அலுவலகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

வீட்டில் இருந்த வண்ணம் சேவையாற்றுமாறு Microsoft நிறுவனம் சீனாவிலுள்ள தமது ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் வுஹான் நகரில் அகப்பட்டுள்ள தமது பிரஜைகளை மீள நாட்டிற்கு அழைப்பதற்கு விமானமொன்றை நியூஸிலாந்து அனுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் தமது பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவின் ஹூபெய் பிராந்தியத்திலுள்ள 700 தென் கொரிய பிரஜைகளுள் ஒரு பிரிவினரை நாட்டிற்கு மீள அழைக்கும் பின்புலத்திலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *