சீனாவில் இருந்து சென்னை வந்த 68 பேருக்கு கொரோனா வைரஸ்?

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் 68 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார். கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவிலிருந்து வரும் அனைத்து விமான பயணிகளையும் விமான நிலையங்களில் முழுமையாக பரிசோதித்து அனுப்பி வருகின்றனர். இதுபோல, சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் கடந்த 20ம் தேதி நள்ளிரவில் இருந்து மத்திய சுகாதாரத்துறை 3 சிறப்பு கவுன்டர்களை அமைத்தது. சீனாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம் கிடையாது. ஆனாலும் சீனாவின் ஹாங்காங் நகரிலிருந்து ஒரு விமானம் வந்து செல்கிறது. அந்த விமான பயணிகளை மட்டுமே தற்போது ஆய்வு செய்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை மையம், அதிநவீன ஆம்புலன்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வரும் விமான போக்குவரத்து ஆணைய மருத்துவ குழுவினர், தமிழக சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து,  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ சோதனைக்கான ஏற்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சீனா உட்பட 7 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை இந்த மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விமானங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருக்கிறதா என பரிசோதிக்கப்படும். இந்த விமான பயணிகளுக்கு விமானங்களிலேயே ஒரு விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். அதில் அவர்களுக்கு இதேபோன்ற அறிகுறிகள் இருந்தால் அதுபற்றி எழுதிக்கொடுக்கலாம். அதோடு விமானம் வந்து சென்னையில் நின்றதும் சீனா வழியாக வரும் பயணிகள் வருவதற்காகவே நவீன ஸ்கேனிங் கருவியுடன் தனி வழி உள்ளது.

தானியங்கி கருவிகள் மூலம் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு உடல் சூடு, மூச்சுத்திணறல் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்காக சென்னை விமான நிலையத்திலேயே ஒரு சிறப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு வைத்து அவர்களை 10 மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அறிகுறிகள் இருந்தால் தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டுக்கு அனுப்பப்படுவார்கள். இதுவரை சென்னை விமான நிலையத்தில் 15,000 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 68 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. எனவே இந்த 68 பயணிகளையும் தமிழக சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கின்றனர். இந்த 68 பயணிகளில் 10 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தில் இதுவரை 3 கவுன்டர்கள்தான் இருந்தன. தற்போது கூடுதலாக 10 கவுன்டர்களாக திறக்கப்பட உள்ளது. அதோடு கூடுதல் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நோய் தடுப்புக்கான உடல் கவசங்கள், கூடுதலாக வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 5,000 பாதுகாப்பு கவசங்களும், ஒரு லட்சம் முக கவசங்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னை மட்டுமின்றி திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இவர்களை பரிசோதிக்கும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் விமான நிலைய ஊழியர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அறிகுறி தென்பட்ட 68 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 68 பேருக்கும் கொரோனா வைரஸ் என்பது ஆய்வு முடிவில் தெரியவரும். விமான நிலையத்தில் சீன பயணிகள் வரும் வழி அவர்கள் கை வைக்கும் இடம், அமர்ந்த இடங்கள் ஆகிய பகுதிகளை உடனுக்குடன் சுத்தப்படுத்த தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *