சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் தமிழினம்! விமலின் செய்கை படுகேவலமானது!! – மாவை எம்.பி. காட்டம்

“இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியில் சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் எமது தமிழினம் சிக்குண்டுள்ளது. இதை சர்வதேச சமூகத்துக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது அமைச்சர் விமல் வீரவன்சவின் அத்துமீறிய – கொடூர – அராஜக நடவடிக்கை.”

– இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

மன்னாரில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழிப் பெயர்ப்பலகையில் முதலிடத்தில் இருந்த தமிழ்மொழி எழுத்துக்களை இரண்டாம் நிலைக்குத் தரவிறக்கம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம். இதில் விமல் வீரவன்ச மோசமான இனவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அவர் மீண்டும் தனது சண்டித்தனத்தைக் காட்டியுள்ளார். மன்னாரில் அவர் செய்த வேலை படுகேவலமானது. எமது தாய் மொழியாம் தமிழை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

அவரின் மோசமான இந்த நடவடிக்கையைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சார்பில் நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ராஜபக்ச ஆட்சியில் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் அரங்கேற்றப்படும் அராஜக நடவடிக்கைகளை சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டி வரும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *