புதுடில்லி நகரில் கோட்டாபயவுக்கு அமோக வரவேற்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுப் பிற்பகல் புதுடில்லியை சென்றடைந்தார்.

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினரை இந்திய அரச போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி வி.கே.சிங் வரவேற்றார்.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் இங்கு வருகை தந்திருந்தனர்.

வரவேற்பு நிகழ்வு பல்வேறு கலாசார அம்சங்களுடன் நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று ஜனாதிபதி கோட்டாபய தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்திக்கவுள்ள கோட்டாபய, இந்தியப் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய இந்தியப் பிரமுகர்கள் பலரையும் ஜனாதிபதி கோட்டாபய சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியுடன் புதுடில்லி சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *