இலங்கை அரசு – தமிழ் மக்கள் – இந்திய அரசு: முத்தரப்பு இணைந்துதான் இனப்பிரச்சினைக்கு தீர்வு! – சம்பந்தன் நம்பிக்கை

“நீண்டகலாமாகத் தொடரும் இனப்பிரச்சினையால் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை, துயரங்களை அனுபவிக்கின்றனர். இலங்கை அரசு, தமிழ் மக்கள், இந்திய அரசு முத்தரப்பும் இணைந்துதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காணமுடியும். இந்த முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னால் முடியுமானளவு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கும். தமிழ் மக்களின் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் வகையில் தீர்வு காணப்படவேண்டும். இந்திய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதீத கரிசனையைக் கொண்டுள்ளது. இந்திய அரசு தற்போது முன்வைத்துள்ள அடியிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘தமிழர்களின் வேணவாக்களை நிறைவேற்றக் கூடியவாறு தீர்வு காணப்படவேண்டும்’ என்று புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற கையோடு அவரை அவசர அவசரமாகச் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்திய அரசின் கருத்தை மனதார வரவேற்கின்றேன். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் இது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற கையுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்து அவரை நேரில் சந்தித்து, இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பேசியமை எமக்கு முழு நம்பிக்கையை வழங்குகின்றது.

இலங்கை அரசு, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும், சமத்துவத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் பல வாக்குறுதிகளை இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், ஐ.நா.வுக்கும் வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கைத் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முழுப்பங்கு உண்டு.

பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் சகல உரிமைகளுடன் ஏனைய இனங்களுடன் சமத்துவமாக வாழ்வதற்கே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இதன் பிரகாரம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை இந்த அரசு காணவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *