நாட்டு மக்களைக் கடத்தி நான் கொல்லவேயில்லை! – கோட்டா கொதிப்பு

“விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் போன்றோ அல்லது தமிழ் ஆயுதக் குழுக்கள் மாதிரியோ நாட்டு மக்களைக் கடத்தி சித்திரவதை செய்து கொல்லும் ஈவிரக்கமற்ற செயலில் ஒருபோதும் நான் ஈடுபடவில்லை. நாட்டு மக்கள் என்னை நம்பியுள்ளார்கள். அதனால் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் தேர்தலுக்கு இன்னமும் சில தினங்கள் இருக்கும் வேளையில் என் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வெள்ளை வான் கடத்தல் நாடக விவகாரத்தை ரணில் அணியினர் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்டதாகத் தெரிவித்த வான் சாரதி ஒருவர் சில விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தார். வெள்ளை வான் கடத்தலுக்குக் கோட்டாபயவே உத்தரவிட்டார் எனவும், 300 பேர் வரையில் கடத்திக் கொல்லப்பட்டனர் எனவும் எனவும் கூறினார். இது தொடர்பில் கோட்டாபயவை சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“என்மீது போலிக் குற்றச்சாட்டுக்களை ரணில் அணியினர் நேரடியாகவும் சிலருக்கு பணம் கொடுத்தும் முன்வைத்து வருகின்றார்கள். இந்தக் கேவலான வேலைகள் மூலம் மக்கள் எனக்கு வழங்கும் ஆதரவை தடுக்கவே முடியாது. மக்கள் சிறுபிள்ளைதனமானவர்கள் அல்லர். தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் என் மீது சேறு பூசி எனது வாக்கு வங்கியை உடைக்கும் வகையிலேயே வெள்ளை வான் கடத்தல் விவகாரத்தை ரணில் அணியினர் கையில் எடுத்துள்ளனர். இது ஜனாதிபதித் தேர்தலுக்காக அவர்கள் தயாரித்த திட்டமிட்ட நாடகம்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் எனது கட்டளையின் பிரகாரம் வெள்ளை வான் கடத்தல் நடக்கவேயில்லை. நாட்டு மக்களைக் கடத்தி நாம் அவ்வாறு கொலை செய்யவும் இல்லை.

என் மீது அமைச்சர் ராஜித சேனாரத்தன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களையும், வெள்ளை வான் வாகன சாரதி முன்வைத்துள்ள கருத்துக்களையும் நான் அடியோடு நிராகரிக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *