ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியில் பட்டப்பகலில் கொலைசெய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல்!

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் – கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த வேளையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தென்மராட்சியில் இன்று மாலை நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின் முதல் நிகழ்வாக சாவகச்சேரியில் அமைந்துள்ள ரவிராஜின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.அதன்பின்னர் கலாசார மண்டபத்தில் நினைவுப் பேருரை நடைபெற்றது.

வாரிவனேஸ்வரர் சிவன் கோயிலின் பிரதம குரு கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் ‘ரவிராஜ்’ நினைவாக ஆத்மா சாந்தியுரையையும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் ‘போரின் முடிவும் போராட்டத் தொடர்ச்சியும்’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்புரையையும் ஆற்றினார்கள். இதன்போது ரவிராஜ் நினைவு விருது வழங்கலும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, க.துரைரெட்ணசிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *