கொலைகாரக் கோட்டாவைக் கூட்டமைப்பு அடியோடு நிராகரித்ததை வரவேற்கிறோம்! – சஜித்தின் வெற்றிக்காகச் சகலரும் ஓரணியில் திரள்வோம் எனப் பிரதமர் ரணில் அறைகூவல்

“மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அரங்கேறிய பலவித படுகொலைகளை நினைவில் வைத்து ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் கோட்டாபய ராஜபக்சவை அடியோடு நிராகரித்து சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமையை நாம் மனதார வரவேற்கின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் முன்னைய செயற்பாடுகளைக் கருத்தில்கொண்டும், அவர்களது தேர்தல் அறிக்கைகளைப் பரிசீலித்தும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலைமைகளைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார்கள். இந்தத் தீர்மானம் ராஜபக்சக்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கும் தெற்கு மற்றும் மலையக மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக இன, மத, பேதம் கடந்து நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *