சஜித்தின் ‘அன்னம்’ சின்னத்துக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்! – மும்மொழிகளிலும் வெளிவந்தது கூட்டமைப்பின் அறிக்கை

“எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ‘அன்னம்’ சின்னத்துக்குத் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு கோரியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து இன்று தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ மூன்றும் தமது மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்திருந்தன. இந்தநிலையில் கூட்டமைப்பாக அதன் அறிக்கை இன்று வெளியானது.

புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிகளிடம் எதிர்பார்க்கும் 4 விடயங்களைக் கூட்டமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.

“உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் செல்லக்கூடிய அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரானவராகவும், அத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரச சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும், அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும், நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்து மக்களும் தமது விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் அதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டின் உருவாக்கத்துக்கு இட்டுச் சென்று, சகல குடிமக்களும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டும்” என்று கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரது கடந்த காலங்கள் தொடர்பிலும் சில விடயங்களைக் கூட்டமைப்பு தனது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளது.

அரசமைப்பின் 17ஆவது திருத்தம் நீக்கம், 18ஆவது திருத்தம் நிறைவேற்றம், அரசமைப்பு பேரவையை இல்லாதொழித்தமை மற்றும் நிறைவேற்று அதிகாரத்தைப் பலப்படுத்தியமை உள்ளிட்டன கோட்டாபய மற்றும் அவரோடு இருந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களாக கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. அத்துடன் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றத் தீர்மானம், அற்ப குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடுத்தமை ஆகியனவும், ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியிலிருப்பதற்கு உதவும் வகையில் அரசமைப்பு திருத்தியமைக்கப்பட்டமையும் சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்கான திடசங்கற்பத்தை எடுத்துக் காட்டியிருந்ததாக கோட்டாபயவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசமைப்புக்கு முரணான செயற்பாடுகள் மற்றும் இலஞ்சம் மற்றும் வேறு சலுகைகள் மூலம் கட்சி தாவலை ஊக்கிவித்து நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தமை என்பனவும் கோட்டாபயவுக்கு எதிரான கடந்த கால விடயங்களாக கூட்டமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த கால காணாமல் ஆக்கப்படல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமை, வெள்ளைவான் பீதி என்பனவும் நன்கு நினைவில் உள்ளது என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வழங்கப்பட்ட முழுமையான ஒத்துழைப்பு இருந்தும், ராஜபக்ச அரசு தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களைக் கைவிட்டு, மக்கள் முரண்பாட்டையும் ஒற்றுமையின்மையையும் தவிர்த்து ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு உதவக்கூடியதாக அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கத் தவறியது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதற்கான தற்போதுள்ள ஏற்பாடுகளை வலுவற்றதாக்குவதற்கும் குறைப்பதற்கும் அரசு மேலும் முயற்சித்தது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதை அரசமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலுள்ள பல அமைப்புகளுக்கும் அது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் அரசு தவறியது. மற்ற முக்கிய வேட்பாளரான சஜித் பிரேமதாஸவினதும் அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினதும் செயலாற்றுகை அத்தகைய முறைப்பாட்டுக்கு இடம் வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அந்நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மக்களின் நலன்களுக்காக மாத்திரமல்லாது நாட்னது நலனுக்காக சில விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பின் அறிக்கை கூறுகின்றது.

ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டினுள் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வைக் காணும் விடயம், காணாமல்போன ஆள்களின் விடயம், தடுப்புக் காவலில் உள்ள ஆள்களின் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல் ஆகியன நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூட்டமைப்புத் தெரிவிக்கின்றது.

கோட்டாபய மற்றும் சஜித்தின் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் அறிக்கை பற்றி பரிசீலனையானது, சஜித்தின் மீது நம்பிக்கை வைப்பது சரியான செயலாக அமையும் என்று தீர்மானித்ததாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மும்மொழிகளிலும் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *