சஜித்தை ஆதரிக்க தமிழரசு தீர்மானம்! – மத்திய குழு ஏகமனதாக முடிவு

* ரெலோ, புளொட்டுடன் கலந்துரையாடி
கூட்டமைப்பின் முடிவை அறிவிக்கும்
பொறுப்பு சம்பந்தனிடம் கையளிப்பு

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

வவுனியாவில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

இதுவரை வெளியான தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸவின் விஞ்ஞாபனமே ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இங்கு குறிப்பிட்டார்.

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே பாவிக்கப்படவில்லை. எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, சஜித்தின் விஞ்ஞாபனம் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் முன்னேற்றகரமாக அமைந்துள்ளது” என்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் யாரும் நிறைவேற்றுவதில்லை. ஆனாலும், சஜித்தின் விஞ்ஞாபனம் ஏற்கக்கூடியது; திருப்திகரமானது” என்று இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் அபிப்பிராயமும் கேட்கப்பட்டது. பலரும் சஜித்துக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தனர். அதன்பின்னர் அவருக்கு ஆதரவு வழங்க ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளுடன் (ரெலோ, புளொட்) கலந்துரையாடி முடிவை அறிவிக்கும் பொறுப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.

கூட்டத்தின் பின்னர் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,

“தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடத்தி இருக்கின்றோம். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களிலும் ஆராயபட்டிருந்தது. இன்று எமது மத்திய செயற்குழுவின் முடிவாக ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரமதாஸவை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்திருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக தமிழரசுக் கட்சி இருக்கின்ற காரணத்தால் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விடயங்கள் ஆகியவற்றை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம்.

மற்றைய இரண்டு பங்காளிக் கட்சித் தலைவர்களோடும் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார்.

பல விடயங்களை ஆராய்ந்திருக்கின்றோம். பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பில்தான் எமது கருத்துக்கள் இருந்தன. அவர்களுடைய கடந்த காலச் செயற்பாடுகள், தேர்தல் விஞ்ஞாபனங்க தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம்.

எமது கருத்தையும் மக்கள் கேட்கின்றார்கள்; மக்கள் திறமைசாலிகள்; அவர்களுக்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. ஆகவே, மக்களுடைய கருத்தையும் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லுவது அல்ல.

நிதானித்து தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையிலே தமிழ் மக்கள் சார்பாக ஏனைய தரப்புக்களுடன் மக்களின் பிரதிநிகளாக நாம் பேச்சு நடத்துகின்றோம். அந்தக் கடப்பாட்டை நாம் சரிவரச் செய்வதாக இருந்தால் மக்களுக்கு ஒரு வழிகாட்டுதல் கொடுக்க வேண்டிய அத்தியாவசியக் கடப்பாடு இருக்கின்றது. அதை நாங்கள் செய்வோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *