மொட்டு, கை உட்பட 17 கட்சிகள் சங்கமம்! – புதிய அரசியல் கூட்டணி உதயம்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 17 கட்சிகள் இணைந்து ‘ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் 10.20 இற்கு இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட மேலும் சில பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புதிய அரசியல் கூட்டணியில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. நிறைவேற்றுக்குழு, தெரிவுக்குழு ஆகியவற்றில் அக்கட்சி உறுப்பினர்களே 51 சதவீதம் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, உதய கம்மன்பிலவின் புதிய ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்காரவின் புதிய இடதுசாரி முன்னணி, திஸ்ஸ விதாரணவின் லங்கா சமசமாஜக் கட்சி, டியூ குணசேகரவின் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஆறுமுகன் தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், முபாற‌க் அப்துல் மஜீத்தின் முஸ்லிம் உலமாக் கட்சி உட்பட 17 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *