இன்று தபால் மூல வாக்களிப்பு: தவறாது பங்கேற்க வேண்டும்!! – ஐந்து தமிழ்க் கட்சிகளும் கூட்டாக வலியுறுத்து

ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் இன்று வியாழக்கிமை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கோர முடியாதுள்ளமையால் மக்கள் தமது வாக்குரியமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டுமென மட்டும் ஐந்து தமிழ்க் கட்சிகளும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றைத் தோற்றுவிக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் இணைந்து இம்மாத நடுப்பகுதியில் பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்து 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

இந்தநிலையில், இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலுள்ள ப்ரைட் இன் விடுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் நேற்றுக் கூடிய ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுமே கூட்டாக மேற்படிக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கிடைக்கப்பெற்றதும் விரைவில் மீண்டும்கூடி யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என நேற்றைய சந்திப்பில் கட்சிகளின் பிரதிநிதிகள் முடிவெடுத்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஐந்து தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“ஐந்து தமிழ்க் கட்சிகளாலும் உடன்பட்டு அவர்கள் சம்மதத்துடன் தயாரிக்கப்பட்ட இன்றைய (நேற்றைய) கூட்டத்தின் இறுதி அறிக்கையை நாங்கள் தருகின்றோம். அதாவது தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளும் இன்றைய தினம்(நேற்று) கூடி நாம் எதிர்நோக்கியிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாகத் தொடர்ந்தும் கலந்துரையாடியுள்ளோம்.

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத சூழ்நிலையில் நாளைய (இன்றைய) தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு நாம் தமிழ் மக்களைக் கோர முடியாது. ஆயினும், தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டுமென்று நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவராத பட்சத்தில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் உள்ளது. அதனால் அனைவரும் வாக்களிக்க வேண்டுமெனக் கோருகின்றோம். ஏனெனில் இன்னும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவரவேண்டியுள்ளன. அவ்வாறு வெளிவரவுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களில் சில விடயங்கள் சேர்க்கப்படலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகளினால் எம்மால் ஒரு முடிவை எடுக்க முடியாமல் உள்ளது. ஏனெனில் அதற்கான சில நடவடிக்கைகள் நடக்கும் நிலையில் எங்களால் அது மழுங்கடிக்கப்பட்டதாக இருக்க நாம் விரும்பவில்லை. ஆகையால் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னர் மீளக்கூடி ஆராய உள்ளோம். அதன் பின்னர் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனாலும், இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் என்ற வகையில் காலத்தை வீணடித்து மக்களைக் குழப்ப நாம் விரும்பவில்லை. ஆகவே, இப்போது நடக்கவுள்ள தபால் மூல வாக்களிப்பில் தமது ஜனநாயக உரிமையைத் தவறாது பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்கின்றோம். அதன்பின்னர் அதாவது வேட்பாளர்களிது விஞ்ஞாபனம் வெளியாகியதையடுத்து கூடி முடிவை எடுப்போம்.

அதேநேரம் இதனை ஏற்பாடு செய்தவர்கள் என்ற அடிப்படையில் மாணவர் ஒன்றியமாக எங்கள் நிலைப்பாட்டையும் நாம் அறிவிப்போம்” – என்றுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளரும் சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலனும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *