பிளவுபடாத இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு! – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் வாக்குறுதி

“பிளவுபடாத – பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘மக்களுக்கான அதிகாரம்’ என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாம் எம் தாய்நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவோம். பிளவுபடாத – பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும். அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாகவும், வினைத்திறனுள்ளதாகவும் மாறும். வீணடிப்புக்கள் குறைக்கப்படும். இந்தச் சீர்திருத்தங்கள் சட்டத்திலும், நடைமுறையிலும் மட்டுமல்லாமல் அனைத்து இலங்கையர்களிடையேயும் உண்மையான ஒற்றுமை உருவாகுவதை உறுதி செய்யும்.

இதுபோன்று மாகாணங்களின் அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை முன்னாள் ஜனாதிபதிகளாகிய ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் கீழ் முன்வைக்கப்பட்ட திட்டங்களைக் கருத்தில்கொண்டு முடிவு செய்யப்படும்.

மத்தியில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்கும், மத்தியும் மாகாணங்களும் தங்களது திறன்களின் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்வதற்காக மாகாண சபையின் பிரதிநிதிகளைக் கொண்ட செனட் சபை ஒன்று உருவாக்கப்படும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *