ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த பச்சிளம் பாலகன் சுர்ஜித் உயிரிழப்பு!

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்துள்ளார் என்று வருவாய் நிர்வாக ஆணையர் இராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே கடந்த 25ஆம் திகதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்தன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீற்றர் அகலத்தில் இந்தக் குழி தோண்டப்பட்டு வந்தது.

ஆழ்துளைக் கிணறு அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்புப் படை வீரர் ஏணி மூலம் இறங்கி பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தார். குழந்தை மீட்புப் பணி நடக்கும் இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்தநிலையில், ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நேற்றிரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது எனவும், அவரது கை சிதைந்துள்ளது எனவும் வருவாய் நிர்வாக ஆணையர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

குழந்தை சுர்ஜித் உயிர்பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில், சுர்ஜித் உயிரிழந்தது தமிழகத்தையே சோகக் கடலில் மூழ்கச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *