கூட்டமைப்பு முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கோம்! – மஹிந்த திட்டவட்ட அறிவிப்பு

“ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளதாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்கமாட்டோம். எமக்கு நாடும் நாட்டின் இறையாண்மையும் முக்கியம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்துப் பெலியத்தையில் நேற்று திங்கட்கிழமை நடத்திய பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்து இன்றுடன் (21) 6 மாதங்களாகி விட்டன. தேசிய பாதுகாப்புத் தொடர்பாக இந்த அரசுக்கு ஒரு தெளிவான கொள்கையில்லை. நாம் ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்திட்டங்களை வகுப்போம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்தமைக்கு இந்த அரசே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். எல்லாத் தகவல்களும் இருந்தும் முறையான புலனாய்வுக் கட்டமைப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத காரணத்தால் அந்தத் தாக்குதலை நடத்தவிட்டு பார்த்துக் கொண்டிருந்தது அரசு.

நாங்கள் நாட்டின் பொறுப்பை ஏற்றால் அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கான பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சி அரசு, அமைச்சரவை ஆகியன ஏற்கவேண்டும்.

ஏப்ரல் 5ஆம் திகதி ஒரு அறிவிப்பு வந்தது. தாக்குதல்தாரிகளின் பெயர்கள், தாக்கப்படும் இடங்கள், தாக்கப்படும் நேரம் என்பன குறித்து அதில் சொல்லப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள்கூட இது தொடர்பாக எச்சரித்திருந்தனர். ஆனால், அரசு எதனையும் கண்டுகொள்ளவில்லை.

மதவழிபாட்டுத் தலங்களுக்குக் கூடச் செல்ல முடியாமல் போனது. இதனால்தான் நாங்கள் கோட்டாபயவை ஜனாதிபதியாக்கிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோருகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளதாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த நிபந்தனையையும் நாங்கள் ஏற்கமாட்டோம். எமக்கு நாடும் நாட்டின் இறையாண்மையும் முக்கியம். எந்த நிபந்தனையும் இதுவரை எம்மிடம் முன்வைக்கப்படவில்லை. அப்படி முன்வைக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், நாட்டைப் பேரம் பேசும் எந்தக் கோரிக்கையையும் நாங்கள் ஏற்கத் தயாரில்லை. அதனை இப்போதே சொல்லி விடுகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *