நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நீதிமன்றில் முற்படுமாறு ஞானசாரருக்கு கட்டளை! – பிறப்பித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில், நீதிமன்றக் கட்டளையை உதாசீனப்படுத்திப் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில், பிக்குவின் உடலைத் தகனம் செய்த கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் இரு பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்று இந்தக் கட்டளையைப் பிறப்பித்தது.

முல்லைத்தீவு, நீராவியடியில் சர்ச்சைக்குரிய வகையில் விகாரை அமைத்துத் தங்கியிருந்த பிக்கு உயிரிழந்த நிலையில் அவரது உடலை அங்கு தகனம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. அருகில் பிள்ளையார் ஆலயம் உள்ள நிலையில் ஆலய நிர்வாகத்தினர் இது தொடர்பாக நீதிமன்றை நாடினர். ஆலய வளாகத்தில் தேரரின் உடலைத் தகனம் செய்யக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று கட்டளை பிறப்பித்தது. எதிர்த் திசையில் உள்ள இராணுவ முகாமின் பின்பாகவுள்ள கடற்கரையோரம் தகனம் செய்ய இரு தரப்பின் இணக்கம் ஏற்பட்டது. எனினும், அதை மீறிப் பிக்குவின் உடல் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக் கேணி அருகே தகனம் செய்யப்பட்டது.

கொழும்பில் இருந்து வந்திருந்த ஞானசாரர் தேரர் தலைமையிலான பிக்குகள் அடங்கிய குழுவினரே உடலைத் தகனம் செய்தனர். அதைத் தடுக்காது பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்தச் சம்பவம் கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்தது.

நீதிமன்றக் கட்டளையை அவமதித்த ஞானசார தேரர், முல்லைத்தீவு மூத்த பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் தலைமையக அதிகாரி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது இந்த வழக்கு விசாரிக்கத் தகுந்தது என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், ஞானசார தேரர் உட்பட 3 எதிர் மனுதாரர்களுக்கும் நீதிமன்றில் தோன்றுமாறு அறிவித்தல் அனுப்பக் கட்டளையிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *