யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு! – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டு இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்து எயார் இந்தியா எலைன்ஸ் (Air India Alliance) நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று சென்னையிலிருந்து அந்த நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் யாழ். சர்வதேச விமான நிலையத்தை முற்பகல் 11 மணியளவில் வந்தடைந்தது.

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ். சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் – பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2,250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசு 1,950 மில்லியன் ரூபா நிதியும் இந்திய அரசின் 300 மில்லியன் ரூபா நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீற்றர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு 72 ஆசனங்களுக்குக் குறைந்த பொம்பார்டியர் – 100 (Bombardier – 100) வகை விமானங்களை ஏற்றி இறக்கக்கூடிய வசதிகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *