காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு கோட்டாபய புது வரைவிலக்கணம்!

“காணாமல்போவது, இராணுவத்தில் சரணடைவது என்ற விடயங்கள் இரு வேறுபட்ட காரணிகளாகும். போர்க்களத்தில் பல சம்பவங்கள் இடம்பெறும். உடல்களைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். காணமல்போனார்கள் எனக் கூறுபவர்களின் உடல்கள் அவர்களின் உறவுகளுக்குக் கிடைக்காமல் போவதன் காரணத்தால்தான் அவ்வாறு கூறுவார்கள். இது எமது தரப்பிலும் இடம்பெற்றது.”

– இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பு – ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பொறுப்புக்கூறல் விடயத்தில் நீங்கள் ஆரம்பத்தில் முன்னெடுத்த நகர்வுகள் என்ன?

பதில்:- காணமல் போனோர் தொடர்பான விடயத்தை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மூலமாக ஆராய்ந்தோம். விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பாக ஆராய்ந்தோம். சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் எமது விடயங்களைக் கவனத்தில் கொள்ளாது அவர்கள் நினைத்த எண்ணிக்கைகளை முன்வைத்தனர். வடக்கு, கிழக்கு மக்களுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்குக் கல்வி, அபிவிருத்தி, வேலைவாய்ப்புகள் வேண்டும் என்ற முக்கியமான தேவைகள் உள்ளன. கடந்த கால விடயங்களை காவிக் கொண்டு செல்ல அவர்கள் விரும்பவில்லை. கடந்த கால குற்றச்சாட்டுக்களை கைவிட்டு இப்போது தேவையான விடயங்களை மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி:- இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவுகள் எங்கே என்ற கேள்வியை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் கேட்கின்றனர். நீங்கள் தான் இராணுவத்தை வழிநடத்தினீர்கள். என்ன நடந்தது அவர்களுக்கு? எங்கே அவர்கள்?

பதில்:- நீங்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளீர்கள். நான் இராணுவத்தை வழிநடத்தவில்லை. இராணுவத் தளபதிதான் இராணுவத்தை வழிநடத்தினார்.

கேள்வி:- இராணுவத்தில் சரணடைந்தவர்கள் எங்கே?

பதில்:- அப்போது இராணுவத்தில் 13 ஆயிரத்து 784 பேர் சரணடைந்தனர் என நினைகின்றேன். இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் சிலருக்கு இராணுவத்திலேயே வேலைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அனைவரும் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். உலகத்தில் எந்தவொரு நாடும் செய்யாத மிகச் சரியான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்தோம். எமது புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை வெளிநாடுகள் அங்கீகரித்தன. நாம் யாரையும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்கவில்லை. பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆறு மாதம், ஒரு வருடம் மற்றும் உயரிய காலமாக இரண்டு ஆண்டுகள் என புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்களை விடுவித்தோம். இதுவே வெற்றிகரமான வேலைத்திட்டம் என நினைக்கின்றேன்.

கேள்வி:- எவரும் காணாமல்போகவில்லை என்றா கூறுகின்றீர்கள்?

பதில்:- காணாமல்போவது, இராணுவத்தில் சரணடைவது என்ற விடயங்கள் இரு வேறுபட்ட காரணிகளாகும். இராணுவத்தில்கூட 4 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் காணாமல்போயுள்ளனர். போர்க் களத்தில் பல சம்பவங்கள் இடம்பெறும். உடல்களைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். யாழ்ப்பாணப் போரில் நான் நேரடியாக எனது கண்களால் இவ்வாறான சம்பவங்களைக் கண்டேன். கண் முன்னே உடல்கள் நாசமாவதை நான் அவதானித்தேன். போரில் பலர் காணாமல்போவார்கள். காணாமல்போனார்கள் எனக் கூறுபவர்களின் உடல்கள் அவர்களின் உறவுகளுக்குக் கிடைக்காமல் போவதன் காரணத்தால்தான் அவ்வாறு கூறுவார்கள். இது எமது தரப்பிலும் இடம்பெற்றது. நீங்கள் கேட்டதற்கு அமைய இராணுவத்தில் சரணடைந்த பொதுமக்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி:- வடக்கில் மக்கள் கூறுவது பொய்யா?

பதில்:- இல்லை, சிலர் அவ்வாறு கூறமுடியும். ஆனால், அவை அனைத்துமே குற்றச்சாட்டுக்கள் மட்டுமே. இவற்றை ஆராய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எந்தத் தகவலும் இல்லை.

கேள்வி:- பரணகம ஆணைக்குழு அவ்வாறு கூறியதே?

பதில்:- இல்லை.

கேள்வி:- நீங்கள் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்தீர்கள் என்று கூறினீர்கள். எவ்வாறான வேலைத்திட்டங்களைக் கையாண்டீர்கள்?

பதில்:- நீங்கள் கடந்த காலத்தைப் பற்றியே கேட்கின்றீர்கள். எதிர்காலம் குறித்துக் கேளுங்களேன். நான் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தே சிந்திக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *