தப்பியது ராஜபக்ச அணியின் மினி முகாம்! – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ‘தாமரை மொட்டு’ மாபெரும் வெற்றி

 

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 17 வட்டாரங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுத் தனது பலத்தைக் காட்டியுள்ளது தாமரை மொட்டுக் கட்சி.

இன்றிரவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 23 ஆயிரத்து 372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், 10 ஆயிரத்து 113 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.
 
அத்துடன், 5 ஆயிரத்து 273 வாக்குகளுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 3 ஆசனங்களையும், 2 ஆயிரத்து 435 வாக்குகளுடன் ஜே.வி.பி. 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
 
காலி மாவட்டத்தில் ராஜபக்ச அணியின் மினி முகாம் எனக் கருதப்படும் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.
 
28 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 75 சதவீதமானோர் வாக்களித்தனர்.
 
ஐந்து கட்சிகளின் சார்பில் 155 பேர் களமிறங்கிய நிலையில் இவர்களிலிருந்து தொகுதி அடிப்படையில் 17 உறுப்பினர்களும், விகிதாசார அடிப்படையில் 11 பேருமாக மொத்தம் 28 பேர் சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
 
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றவில்லை.
 
எல்பிட்டிய பிரதேச சபைக்கான
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?
 
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நகர, பிரதேச, மாநகர சபைகளுக்கான தேர்தல்கள் கட்டங்கட்டமாகவே நடத்தப்பட்டன. 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் முடிவை அரசு எடுத்தது.
 
அத்துடன், தேர்தல் முறைமையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி விகிதாசார முறைமையில் அல்லாமல் தொகுதி, விகிதாசாரம் எனக் கலப்பு முறைமையிலேயே 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில், வேட்புமனுத் தாக்கலின்போது, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு தேர்தல்கள் அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டது.
 
இதற்கு எதிராக அக்கட்சி உறுப்பினர்கள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தனர்.
 
இதனையடுத்து ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும்வரை எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
 
இதனால், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்கே தேர்தல் நடத்தப்பட்டது.
 
இந்தநிலையிலேயே இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை ஏற்று எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை உடன் நடத்துமாறும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
இதன்படி ஒக்டோபர் 11ஆம் திகதி (இன்று) தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. கடந்த மாதம் (செப்டெம்பர்) 27 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டது.
 
தேர்தல் முடிவுகளின் பிரகாரம் எல்பிட்டிய பிரதேச சபையில் 17 வட்டாரங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.
 
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் இந்தத் தேர்தல் நடைபெற்றமை பிரதான தேர்தலுக்கான ஒத்திகையாகவே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கான ஆதரவையும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவையும் நாடி பிடித்துப் பார்க்கும் வகையில் அமைந்த இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது செல்வாக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது.
 
எனினும், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
“எல்பிட்டிய தொகுதியை மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு தொகுதியைப் போன்றதாகும். எந்தவொரு அரசிலும் மத்திய கொழும்புத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கின்றது. அதேபோன்று எல்பிட்டியத் தொகுதியில் ராஜபக்ச அணிதான் வெற்றி பெறும். நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பது ஏற்கனவே அறிந்த விடயம். எனினும், சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது” என்று அவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *