தமிழ்ப் பொது வேட்பாளரின் பின்னணியில் ராஜபக்சக்கள்! – தமிழர்கள் முட்டாள்கள் அல்லர் என்கிறார் ரணில்

“ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடனேயே தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் முயற்சியில் ஒரு தரப்பு ஈடுபட்டுள்ளது. இதன்பின்னணியில் ராஜபக்ச அணியினர் இருக்கின்றனர். இதில் எந்தச் சந்தேகமுமில்லை.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தார் எனவும், அதற்கு அவர் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார் எனவும் ‘உதயன்’ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிப்பதில் தமிழ் மக்களின் வாக்குகளும் பிரதான பங்கு வகிக்கின்றன. இதை எவரும் மறுக்கவே முடியாது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடனேயே அங்கு பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் முயற்சியில் ஒரு தரப்பு ஈடுபட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரில் ஒருவரைப் பொதுவேட்பாளராகக் களமிறக்க குறித்த தரப்பு கடும் பிரயத்தனம் எடுத்தது. ஆனால், அது பயனளிக்கவில்லை என எமக்குத் தகவல் கிடைத்தது.

வடக்கு, கிழக்கில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் பின்னணியில் ராஜபக்ச அணியினர் இருக்கின்றனர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லை.

2005ஆம் ஆண்டு போல் இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் அல்லது அவர்கள் மத்தியில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி அவர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்பதே ராஜபக்ச அணியினரின் விருப்பமாக இருக்கின்றது. தமது நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே வடக்கு, கிழக்கில் ஒரு தரப்பைப் பணிக்கு அமர்த்தியுள்ளனர் ராஜபக்ச அணியினர்.

ஆனால், வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்லர். அவர்கள் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர்.

எத்தனை வேட்பாளர்கள் களமிறங்கினாலும் ஐ.தே.கவின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதியாகப் பதவியேற்பார். ரணசிங்க பிரேமதாஸவுக்குப் பின்னர் அவரின் மகன் சஜித் பிரேமதாஸ சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின மக்களின் ஆதரவுடன் ஐ.தே.கவின் ஜனாதிபதி என்ற நாமத்தைப் பெறுவார்” – என்று பிரதமர் ரணில் மேலும் தெரிவித்தார் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *