சஜித்தையா – கோட்டாவையா வெல்லவைக்கப்போகிறீர்கள்? கூட்டமைப்பு – முன்னணி நேரடி மோதல்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாக ஒருவரை இலகுவாக வெற்றியடையச் செய்யக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க, அப்படியானால் வாக்களித்து சஜித் பிரேமதாஸவை வெல்லவைக்கப் போகின்றீர்களா என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பதில் கேள்வி எழுப்பினர்.

வாக்களிக்காமல் விட்டு கோட்டாய ராஜபக்சவை நீங்கள் வெல்ல வைக்கப் போகின்றீர்களா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதில் கேள்வி எழுப்பியது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை நடைபெற்றது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை நியமித்த குழு கலந்துரையாடல் நடத்தியிருந்தாலும் அது தோல்வியில் முடிந்திருந்தது. இந்தநிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின்போது சிங்களத் தேசியவாதிகளை நம்ப முடியாத சூழலில் தேர்தலைப் புறக்கணிப்பதே சிறந்தது என முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. புறக்கணிக்கும் முடிவை ஏற்க முடியாது என்று ரெலோ, புளொட், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களால் கருத்து முன்வைக்கப்பட்டது.

தேர்தல் புறக்கணிப்பு விடயத்தையும், முடிவுகளில் ஒன்றாகக் கவனத்தில் கொள்ளலாம். ஆனால், புறக்கணிப்பதன் ஊடாக ஒருவரை இலகுவாக வெற்றியடையச் செய்யக் கூடாது என்று கூட்டமைப்பு குறிப்பிட்டது. இதன் காரணமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது.

போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் தமிழ் மக்களின் சார்பில் கோரிக்கைகளை பட்டியலிட்டு முன்வைப்பது என்றும், அதன் பிரகாரம் இறுதித் தீர்மானத்தை எடுப்பது என்றும், அதற்காக சகல கட்சிகளிலிருந்தும் தலா 2 பேர் வீதம் கொண்ட குழுவை அமைப்பது என்றும் இறுதியில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் குழு நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் கூடி ஆராயவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *